Wednesday, June 3, 2015

மலைமுடி




அன்பு ஜெயமோகன்,

          வெண்முரசு நாவல் வரிசையில் ஏழாவதாகத் துவங்கி இருப்பது இந்திர நீலம். காண்டவத்தின் தடுமாற்றம் ஒருவேளை உங்களை அதிகம் தனிமை குறித்து யோசிக்க வைத்து விட்டதோ? அத்தியாயம் முழுக்கத் தனிமையையே சுமந்து நிற்கும் பாத்திரங்கள், விவரணைகள். தங்களைச் சுமந்து செல்வதாக வெண்முரசை நீங்கள் பார்க்கிறீர்கள். அதுவோ உங்களையன்றோ சுமந்து செல்கிறது. வெண்முரசுவின் அடியாழத்தில் விரிந்திருக்கும் அடர்ந்த தனிமையைக் கண்டடைவதற்காகத்தான் வார்த்தைச் சப்தங்கள்தான் நாவல் வரிசைகளாக மேலெழுகின்றனவா? அலை எழுப்பும் கடலின் அருகே நின்று கொண்டு மணலைப் பார்த்தேன். அலைகள் சப்தங்களாக மட்டும் தெரிந்தன. கடலைக் கடந்து தெரியும் வான்பரப்பைப் பார்த்தேன். அலைகளினூடே படர்ந்திருக்கும் பேரமைதி மட்டும் தெரிந்தது. இந்திர நீலம் முன்வைக்கும் அதீதத் தனிமையை அனுபவமின்றி ஏற்றுக்கொள்ளல் சாத்தியம் இல்லை.

தனித்திருக்கும்போதான தனிமையை நினைவூட்டித் துவங்கி இருந்த்து முதல் அத்தியாயத்தின் முதல் வரி. “தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு” எனும் வரி கொண்டிருக்கும் தனிமையின் வடிவத்தைக் கண்டுவிட முயன்றேன். விண்ணென விரிந்தபடியே சென்ற அத்தனிமையைத் தொடர்வது மிகச்சிரமம். இருந்தும் அத்தனிமையைக் குறித்த எண்ணமே என்னை உயிர்ப்புள்ளவனாக வைத்திருக்கிறது என்றும் தோன்றுகிறது. “சின்னஞ்சிறியவற்றின் தனிமை”, ”பெருந்தனிமை சூழ்ந்தது”, “விண்ணிறைந்து கிடக்கும் பெருந்தனிமையின் துளியை”, “விண்ணிறைந்த முழுமுதல் தனிமை” என வாக்கியங்கள் சுமந்து நிற்கும் தனிமை என்னை வள்ளலாரிடம் இழுத்துச் சென்றது. “தனித்திரு”, “தனிப்பெருங்கருணை” போன்ற அவரின் சொற்களில் மூலமாய் இருந்த தனிமையை ஓரளவு விளங்கிக்கொள்ளவும் முடிந்தது. ”தன்னந்தனி நின்றது தானறிய” என்பார் அருணகிரிநாதர். கந்தர் அலங்காரத்தில் “வெறும்பாழை பெற்ற வெறுந்தனியை” என்றும் சொல்வார்.

பொருளற்ற தனிமை என்னைச் சூழ்ந்ததாக பலமுறை கருதி இருக்கிறேன். இன்றைக்குச் சிலநொடிகள் முன்பும் தனிமை என்னைச் சூழ்ந்தது. தனிமையை அப்படியே எதிர்கொண்டேன். தனிமை விலகிய இன்றைக்கு நான் பொருளற்றவனாக உணர்ந்தேன். தனிமை தனித்துவமானது. நினைவுக்கு அதை இழுத்துவந்த முதல் அத்தியாயத்துக்கு நன்றி.

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.