Friday, June 19, 2015

கதையம்சம்

ஆசிரியருக்கு ,

அவதானிப்புகளும் , விவரிப்புகளும் வர்ணனைகளும் ஒரு படைப்பின் அலங்காரமென்றால் அதன் ரத்தினம் கதை தான். உண்மையில் நம்முள் ஆழ அமர்வது கதைதானே அன்றி விவரிப்புகள் அல்ல.

இந்திரநீலத்தின் கதையம்சம் பிரம்மிக்க வைக்கிறது ( இந்த சமயம் பார்த்து வெளிநாட்டில் போய் உட்கார்ந்து விட்டர்கள்).  இது போன்ற கதைப் போக்குள்ள ஆக்கங்களை நான் என் வாழ்வில் மிக மிக குறைவாகவே படித்துள்ளேன். 

சத்ரஜித்தின் குடியும் , மெல்ல மெல்ல தாழ்ந்ததற்கு தயாராகும் மனமும், அதை உயர்த்திச் சொல்லும் பாவனையும் , இதன் இடையில்  இந்த பிரசேனர் -லட்சுமணர் உரையாடலும், பாணர்களின் திரிக்கும் பாடல்களும்,  சிசுபாலரின் புறக்கணிப்பும் அனைத்திற்கும் அடியில் அமைதியாக ஒளிவிடும் சியாமங்கதமும் ஒரு விசைப்  படகில் அதி விரைவில் செல்லும் பயணத்திற்கு நிகர். சில இடங்களில் ஒரு மென் கதி, சில இடங்களில் குதித்து தாழ்தல், சுழித்தல், மூழ்குதல், அருவியில் பாய்தல்.

இறுதியில் உடலெல்லாம் நீரின் ஈரம்.

கிருஷ்ணன்.