கர்ணன்
மற்றும் சிவதர் இருவரின் சொல்லாடல்களும், அவர்களுக்கிடையில் நடக்கும்
நிகழ்வுகளும், சிவதர் அமைச்சர் என்ற நிலையைத் தவிர்த்து, கர்ணனுக்கு,
கர்ணனின் மதிப்பு பிறரால் மற்றும் அவன் மனைவியரால் பாதிக்கப்படும்
போதெல்லாம் அவனுக்காக மனம் கசியும் தந்தையாகவும், அங்கதச் சொல்லாடலில் உற்ற
நண்பனாகவும், அரசுசூழ்தல் கருத்துக்களை அவனுக்குச் சொல்லும்போது நல்ல
அமைச்சனாகவும், பணிவிடைகள் செய்யும்போது நல்ல பணியாளனாகவும்
பரிணமிக்கிறார்.
எல்லாவற்றுக்கும்
மேலாக, அவர்கள் இருவருக்குமிடையே உடாடும் அன்பு, நட்பு, பாசம், தோழமை
அனைத்தும் நம்மை மிகவும் நெகிழ வைப்பதாக உள்ளது. அவரது தோளைத்
தொட்டுவிட்டு விலகிச் சென்ற கர்ணன் தான் நமக்கு எத்தனை எத்தனையோ செய்திகளை
அளித்துச் செல்கிறான். அந்தத் தொடுதல் ஒன்றே அவனில் அவர்பால் உள்ள அனைத்து
உணர்வுகளையும் நமக்கு காட்டிச் செல்கிறது.
அனைத்தையும்
இழந்து நிற்கும் கர்ணன் ஒருவகையில், தன் வாழ்க்கையில் தொடர்புள்ள
துரியோதன், பானுமதி, உறரிதர், சிவதர் மற்றும் இது போன்ற உற்றவர்களால்
அனைத்தையும் பெற்றவனாகவும் இருக்கிறான் என்பது சிறப்பு. தணலால் சுடப்பட்ட
அங்கம், பூசப்படும் சந்தனத்தால் அடையும் குளிர்ச்சி போல.
- கணபதி கண்ணன்