வெண்முரசில் கர்ணனின் மிக முக்கியமான உடல் மொழி என்றால் அது அவன் மீசையை நீவி விடுவது தான். அவன் எப்போதெல்லாம் பெருமிதமாக உணர்கிறானோ, எப்போதெல்லாம் தன்னைத் தொகுத்துக் கொண்டு தன்னுள் ஆழ்ந்து போகிறானோ, எப்போதெல்லாம் தருக்கி நிமிர்கிறானோ அப்போதெல்லாம் மீசையை நீவுவது அவன் வழக்கம்.
முதன் முதலாக அவனில் இந்த உடல் மொழி வெளிப்பட்ட இடம் திரௌபதி அவனை பார்க்கும் அந்த கொற்றவையின் ஆலயம். அவளின் இயல்புக்கு ஏற்றார் போல் நேரடியாக, முகத்தைத் தூக்கி அவனைப் பார்க்கிறாள். அப்போதும் அவள் உயரம் அவன் மார்பளவே!! அங்கே இருந்த கவசத்தைத் தான் அவள் தேடுவாள். அதோடு கர்ணனை உள்ளூர ரசிக்கவும் செய்வாள். மிக இயல்பாக கர்ணனின் கை அவன் மீசையை நீவி விடும். அவனுக்குள் அவன் தான் ஒரு ஆண் என உணர்ந்து கொண்ட அந்த முதல் தருணத்தை அவன் எப்போதுமே இழக்கவில்லை. மீண்டும் மீண்டும் கொற்றவை ஆலயங்களாக சம்பாபுரியில் கட்டி அத்தருனத்தைத் தனக்குள் மீட்டிகொண்டேயிருக்கிறான்.
அதன் பிறகு அவனுடைய இந்த உடல் மொழி பல இடங்களில் வெண்முரசில் வருகிறது. காம்பில்யப் போரின் போது துரியனின் செய்திக்காகக் காத்திருக்கும் போதும், அரசவைகளில் அங்கேயில்லாதது போல் விழி சாய்த்து அமர்ந்திருக்கும் போதும், சுப்ரியையின் சேடியிடம் கருவூலத்தைத் திறந்து விட முடியாது என்று சொல்லி மீளும் போதும் எல்லாம் அவன் கை மீசையை நீவி விட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அச்செயல் மூலம் அவன் தன்னை முழுவதுமாகத் தொகுத்துக் கொள்கிறான்.
இன்று பீமன் அவனை நோக்கி வரும் போதும் அவன் கை மீசையை நீவுகிறது. அது பீமன் அவனை அவமதித்தால் அதை எதிர்கொள்ள வேண்டி தருக்கி நிற்பதற்காக. அவனை அரண்மனைக்கு வருக என்று அழைக்கும் போதும் அதே தருக்கலோடு தான் அவன் பதிலிறுக்கிறான். ஆனால் குந்தியின் செய்தியைக் கேட்டதும் அவனுள் ஒரு நெகிழ்வு. ஆம். அது அவனை இன்னும் மறவாத அவன் அன்னையின் அழைப்பு. அவமரியாதையை எதிர்பார்த்தவனுக்கு அன்னையின் அரவணைப்பு.
பீமனின் பணிவு மேலும் ஒரு ஆச்சரியம். அவனுக்கு ஏற்கனவே தெரிந்த உண்மை தான் கர்ணன் மீதான குந்தியின் பாசம். அழைப்பை முதலில் தருகையில் அது பேரரசியின் அழைப்பு என்கிறான். இதைச் சொல்லிவிட்டு கர்ணன் கண்களை ஒரு கணம் பார்த்துவிட்டு தலையைத் தாழ்த்துகிறான். அதன் பிறகு அவன் அச்செய்தியை மார்த்திகாவதியின் பிருதையின் செய்தி என்கிறான். ஓரளவிற்கு பீமன் ஊகித்து விட்டான், கர்ணன் குந்தி பிருதையாய் இருந்த காலத்தின் நிகழ்காலம் என்பதை. செய்தியை அறிவித்த பிறகு அவன் கர்ணனைத் தலைவணங்கி செல்கிறான்.
அழைப்பைக் கேட்ட பின் கர்ணன் 'மீசையை முறுக்கியும் கலைத்து நீவி மீண்டும் முறுக்கியும்' நிற்கிறான். இம்முறை அவன் நீவுவது பெருமிதத்தால் மனம் நிறைந்திருப்பதால், மீண்டும் மகன் என உணர்வதால். அதனால் தான் அனைத்து ஆடைகளையும், அங்க அரசன், சூதன் மகன், சூரிய புத்திரன் என்ற அனைத்து ஆடைகளையும் களைந்து சிறுவர்களைப் போல நீராட விழைகிறான். அவன் உள்ளம் நீருள் துழாவத் துவங்கி விட்டது. மிதந்தலையும் அன்னமாக அவன் மாறிவிட்டான். வெய்யோன் 45 ல் நீரில் நாரைகள் செல்வதாகத் தான் வருகிறது. சண்முகவேல் அன்னங்களை வரைந்திருக்கிறார். உண்மையில் ஒரு அன்னம் மட்டுமே வரையப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 'உள்ளம் என்பது அன்னத்தின் கால். அது இயங்குவதை அன்னம் அறியாது.' என்ற பராசரின் உவமைக்கு உவமானமாக நம் கர்ணனே நிற்பது போல!!
அருணாச்சலம் மகராஜன்