ரக்தபீஜன் பல்கிப் பல்கிப் பெருகுகிறான். செல்லும் இடமெல்லாம் அவனே என நிரம்புகிறான். அவனை கொல்லச்செய்யும் முயற்சியே அவனை பெருக்கி வலிமையாக்குகிறது. அத்தனை ரக்தபீஜன்களை தோற்றுவிக்கும் அந்த மூல ரக்தபீஜனை கண்டுபிடித்து அழித்தாலன்றி அவனை அழித்தல் இயலாது.
இந்த புராணக் கதை, மனிதனின் அதீத கற்பனைப்புனைவு, நிஜ உலகில் நடக்கவே இயலாத நிகழ்வு எனத் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருப்பது இந்தக் கதை. ஆம் பல்கிப் பெருகும் நம் எண்ணங்கள்தான் ரக்தபீஜன்கள். நம் எண்ணங்கள் நம் உள்ளத்தில் பெருகிய வண்ணம் இருக்கின்றன. ஐம்புலன்களால் அடையும் அனுபவங்கள் நம்முள் புதுப்புது எண்ணங்களை தோற்றுவித்தவண்ணம் இருக்கின்றன. நாம் அந்த எண்ணத்தை அழிக்க வேண்டும் என ஒருவன் முயலும் போது மேலும் அது பல எண்ணங்கள் தோற்றுவிக்கின்றன.
இப்படி பெருகும் பெரும்பாலான எண்ணங்கள் தேவையற்றவை, அற்பமானவை, சுயநலம் நிறைந்தவை, சுய இரக்கம் கொண்டவை, வஞ்சம் நிரம்பியவை, காமம் சார்ந்தவை. பொறமை, கோபம், ஆசை போன்றவற்றின் அடிப்படையில் நாம் தவறிழைக்க, அறமீறல்களைச் செய்ய, தூண்டுபவை இந்த எண்ணங்களே. ஒருவன் ஆயிரம் முறை தன் எண்ணங்களில் ஒரு குற்றத்தை நிகழ்த்திய பின்தான் அதை நிஜத்தில் செயல்படுத்துகிறான். உலக வாழ்வில் அதிக தவறுகள் செய்யாத ஒருவன்கூட தன் மனதில் பல குற்றங்களை நிகழ்த்திக்கொள்கிறான். ஒரு சாமானிய மனிதன் தனக்கு தீங்கிழைத்ததாக கருதும் ஒருவனை தன் உள்ளத்தில் பல முறை விதவிதமாக சித்திரவதை செய்து கொல்கிறான். தனக்கு எவ்வித உறவோ தொடர்போ உரிமையோ இல்லாத ஒரு நபரிடம் முறையற்ற காமம் கொண்டு மனதினில் ஆயிரம் முறை புணர்கிறான். பக்கத்து வீட்டுக்காரனுக்கோ தன் உறவினனுக்கோ எந்தந்த வகையில் நஷ்டம், தீமை வந்தால் நன்றாக இருக்கும் என கற்பனைசெய்து எண்ணிக் களிக்கிறான். தான் மிகவும் மதிப்பதாய் வெளியில் காட்டிக்கொள்ளும் ஒருவனை தன் மனதினில் பலவாறு வசைச்சொல் கொண்டு திட்டிக்கொள்கிறான். ஒரு மனிதன் எண்ணுவதையெல்லாம் நாம் அறிய முடிந்தால் அவன் அரக்கனாகத்தான் தென்படுவான். நாம் நம் பண்பாட்டால், சமூக விதிகளால், கட்டுப்படுத்தப்பட்டு நம் மனம்போனபடி நடக்காமல் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்கிறோம்.
நாம் மனம் என்று சொல்வதே இந்த எண்ணங்களின் தொகையைத்தான் அல்லவா. நம் செயல்கள் எல்லாம் நம் உளப்படி நடத்துக்கிறோம். ஆனால் நம் உள்ளமோ கட்டற்று பெருகும் எண்ணங்களின் பிடியில். அதைக் கட்டுப்படுத்தி நேர்படுத்தும் போது மட்டுமே நாம் சிறந்த முடிவுகளை எடுத்து ஒரு செயலை சிறப்பாக ஆற்ற முடியும். எண்ணங்களை எந்த அளவுக்கு ஒருவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ அந்த அளவுக்கு ஒரு மனிதன் வல்லமை கொள்கிறான். இந்திய ஆன்மீகம் அந்த எண்ணப் பெருகுதலை கட்டுப்படுத்தச்சொல்கிறது. அதற்கு தியானம் , தவம், வழிபாடு, நியமங்கள் என பல வழிமுறைகளை சொல்கிறது.
ஆனால் இரமணர் இந்த மனதை மாய்த்துவிடுவதே முழுமையான ஒரே வழி என்கிறார். அனைத்து எண்ணங்களும் ஒரே எண்ணத்தை மூலமாகக் கொண்டது. அது தன்னை 'நான்' என்றறியும் அகங்காரம். நான் என்ற எண்ணமே அனைத்து எண்ணங்களின் தோற்றுவாயாக இருக்கிறது. அதன்மேல்தான் மனம் கட்டப்பட்டிருக்கிறது. ஆக அந்த நான் என்ற எண்ணம் உருவாகும் இடத்தை கண்டறிதல் மூல ரக்தபீஜனை கண்டறிவதுபோல. அதை அறிந்தாலே போதும் அந்த அகங்காரம் சாய்ந்துவிடும்.அதற்கு 'நான் யார்' என்ற ஞான விசாரம் என்ற தவத்தை மேற்கொள்ளச் சொல்கிறார். அப்போது அன்னை ஞானாம்பிகை எழுவாள். அவளின் தரிசனத்திலேயே அந்த குறைபட்ட அகங்கார 'நான்' அழிந்து, அனைத்தையும் உள்ளடக்கிய தன்னைத் தவிர வேறு என்பதற்ற பரிபூரணமாய் தன்னை அறியும் ஒரு 'நான்' உயிர்த்தெழும். அப்பொதுதான் அந்த ரக்தபீஜன் ஸம்ஹாரம் செய்யப்பட்டவனாவான்.
தண்டபாணி துரைவேல்