அன்புடன் ஆசிரியருக்கு,
இம்மூன்று நாட்களும் பெருகி வந்த உளநிலை இன்று விம்மலுடன்
முற்று பெற்றது. அன்னையென எழுபவள் அடிபணிகின்றன அத்தனை அறங்களும்.
"நில்லுங்கள்" என பீடம் உரசி ஒலிக்க விகர்ணன் எழும் கணம் அவனை கர்ணனாக
காட்டினீர்கள். அவன் நானும் தான் என்றுணர்ந்தேன்.
துரியோதனனிடம் வெற்றியின் தருக்கோ இறுமாப்போ வெளிப்படவில்லை.
வெல்ல முடியாமையால் எழும் ஆற்றாமையே மேலோங்குகிறது. ஆம். அவள்
எவருக்கும் உரிமையென ஆகவே முடியாது. காளிகன் காண்பது கனிந்த அன்னை
துச்சாதனன் காண்பது முனிந்த அன்னை. மண்ணையும் மனையையும் மகளையும்
அன்னையென்றே கண்ட நிலத்தின் மைந்தன் என நினைத்து விம்முகிறேன். என்
சிற்றூரை நோக்கும் போதே தெரிகிறது. பொது மகாகாளி மாரி திரௌபதி காளி
அன்னபூரணி என எத்தனை அன்னைகள்!
குழையவும் வெறுக்கவும் வெல்லவும் ஆண் கற்பது அன்னையிடம் தானே.
அறத்திற்கும் பேரறத்திற்குமான மோதல் அப்பகடைக்களம். அத்தனை அன்னையரும்
ஒன்றென்றாகி பேரன்னை என விரிகின்றனர். அவர்களை ஒன்று திரட்டும் விசையாய்
நிற்கிறான் குழலோன்.
காற்றினை தழுவ மட்டும் அனுமதிக்கும் பாறை. அவள் கொற்றவை.
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்