எந்த இடத்தில் அமர்ந்தாலும் அந்த இடத்தையே பீடமெனவே உணரச்செய்யும்
திரௌபதி மனிதர்நிழிலில் தன்னை மறைத்து உட்கார்ந்தாள் என்பதை படிக்கும்போது விம்மாமல்
இருக்கமுடியவில்லை.
சொல்வளர்காட்டில்
பாண்டவர்களை அறிமுகப்படுத்தும்போது புதிய மனநிலை
ஒன்றை அவர்களிடம் காட்டி மனிதமனதின் விசித்திரத்தில் மூழ்கடிக்கின்றீர்கள்
ஜெ. அதே நேரத்தில் சாதனையாளர்கள் மனதின் இருண்டபகுதிக்கு செல்லாமல்
ஒளிவெளிக்கு எளிதில் புன்னகையோடு திரும்பிவிடுகிறார்கள் என்பதையும் உணர
முடிகிறது.
தருமன், திரௌபதியை தவிர மற்ற நால்வரும் லேசான இதயம் கொண்டவர்களாக,
தீயில் எரிந்தபின் முளைத்த கரும்புபோல் தூய்மையாக மென்மையாக மாறிவிட்டார்கள். லேசான
இதயம் கொண்டவர்களாக மாறிவிட்டதற்கு இன்னும் அதிகமாக சரியாக அவர்கள் தருமனை புரிந்துக்கொள்ளும்
தருணம் ஒன்று வாய்த்ததன் இன்பம் அவர்களிடம் உள்ளது. தருமன் அவர்கள் அனைவரையும் அவர்கள்
அவர்களாகவே ஏற்றுக்கொண்டு உயர்ந்து நிற்கின்றான். அறம் என்பதே இருப்பதை இருக்கின்ற
வழியிலேயே ஏற்றுக்கொள்வதுதான் என்று நினைக்கிறேன்.
பீமனின்
வசைகளை தந்தையின் நாக்கில் இருந்து வந்த சொற்கள் என்பதாகக்கொள்ளும் தருமன்
பேரறத்தான்தான். இந்த பேரறம் என்பதைக்காட்டத்தான் ஜெவின் சொற்கள் வேண்டி
உள்ளது. இப்படி ஒருசொல் இப்படி ஒருகாட்சி இதுதான் வாழ்க்கையை
புரட்டிப்போடுகின்றது ஜெ. எவ்வளவுதான் வாழ்ந்துக்காட்டினாலும்
தெளிவுபெறமுடியாத உண்மைகள் இதுபோன்ற சொற்களின் வழியாக
காட்சிப்படுத்தப்படும்போது வாழ்வின் எல்லையை உணர தொடவைக்கிறது.
ஊழின் வலியை தாங்க பெரும் ஊழின் விளையாட்டுக்குபின்பு ஜெ படைக்கும்
வரிகள் அற்புதமானவை. இதைத்தாண்டி போகமுடியவில்லை. .
//காத்யாயனர் புன்னகையுடன் “ஊழின் வழிகளைப்பற்றி ஒருபோதும் உள்ளி உள்ளிச் சொல்லாடலாகாது என்பதே மூதாதையர் கூற்று” என்றார். “அங்கு நிகழ்ந்தவை வேறுமுறையில் நிகழமுடியாதவை என்று உணரும் அடக்கம் இருந்தால் மட்டுமே அவை அளித்த துயரத்தை கடக்கமுடியும். ஒரு சிறு இறகு காற்றில் பறந்தலைவதை காணுங்கள். அது தேரும் திசையும் சென்றமரும் இடமும் முடிவிலா விசும்பால் முடிவுசெய்யப்படுபவை என்று அறிவீர்களா? பெருங்கடல்களை ஊதிப் பறக்கவைக்கும் வெறுமைப்பெருக்கே அந்தச் சிறு தூவலையும் அலைக்கழிக்கின்றது என்றால் வியப்பு கொள்ளாதிருப்பீர்களா? ஆமென்றால் மட்டுமே துயரை கடக்க முடியும் என்றறிக!”//
புடவியின் விசை மற்றும் எதிர்விசையை
விளக்க ஜெ காற்றை மையமாக்கி தேரையம் இறகிதழையும் பயன்படுத்தி காட்டும் உண்மை விளக்கம்
ஞானப்படையல்.
//காத்யாயனர் “ஒவ்வொரு விசைக்கும் நிகரான மறுவிசை எழுவதாகவே இப்புடவி உள்ளது. தேர்ச்சிற்பிகளுக்கு அது தெரியும்… தேர் விரைவுகொள்ளும்தோறும் காற்று கல்லாகிறது என்று ஒரு பழமொழி உண்டு. சிறிய இறகிதழை மெல்ல ஏந்தி அது விழைந்த திசைக்கு கொண்டுசெல்லும் அதே மென்காற்றுதான் அதுவும்” என்று புன்னகைத்தார். “ஒழுக்கநோன்பாளனின் காமம் கடல் வற்றித் துளியாவதுபோல் கடுங்கசப்பு கொள்கிறது. அறத்தில் அமைந்தவனின் ஆணவம் ஏழுமுனையும் கூர்மை பெறுகிறது. ஐந்தவிந்து அடங்கியவனில் சினம் அணையாக்கனல் என காத்திருக்கிறது. அரசே, தவம்செய்பவனை நோக்கியே மாரன் ஐந்து படைகளுடன் வருகிறான். இருண்டதெய்வங்கள் விழியொளிர வந்து சூழ்கின்றன. இந்திரனின் படைகள் அவன் மீதே ஏவப்படுகின்றன.”//
சொல்வளர்க்காடு உள்ளத்தில் பெரும்வனங்களை பூக்கவைக்கிறது.
ராமராஜன் மாணிக்கவேல்