திரௌபதி அவைக்களத்துக்கு இழுத்து வரப்பட்டு
அவமானப் படுத்தப் படுவது ஒன்றும் சடுதியில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல. படிப்படியாக
ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அங்கிருக்கும் அனைவரின் ஒப்புதலின் படியே நடத்தப்பட்ட
ஒன்று. அந்த அனைவரில் பிதாமகர் பீஷ்மர், ஆச்சாரியார் கிருபர், துரோணர், பேரமைச்சர்
விதுரர், கௌரவ நூற்றுவர், கர்ணன், பாண்டவர் ஐவர், அஸ்தினபுரியின் ஒட்டுமொத்த
குடியினர் என அனைவருமே அடக்கம். ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு நியாயங்கள்!!
ஆம், அவ்வாறு தருக்கி எழுந்த ஒரு ஆண்மைகள்
தான் அன்னை சீதையை எரி புக வைத்தன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் புலோமையை,
ரேணுகையை, அகலிகையை, மாதவியை, கண்ணகியை அவமானப்படுத்தின, உயிரையே கூட எடுத்தன.
அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் திரௌபதியை ஆடையவிழ்த்து கீழடக்க எண்ணின. அவ்வாறு
தருக்கிய, தருக்கும் ஆண்மைகள் தான் இன்று இணையத்தில் பெண்களை எத்தரத்திற்கும்
கீழிறங்கி பேசி ‘like’குகள் அள்ளச் சொல்கின்றன. அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான்
தன்னை முந்திய பெண் ஓட்டும் வாகனத்தை எப்பாடுபட்டேனும் முந்திச் செல்லச் சொல்கின்றன.
அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் மனைவியை அடித்து அடக்கச் சொல்கின்றன. அவ்வாறு
தருக்கிய ஆண்மைகள் தான் மறுத்தவளின் முகத்தில் அமிலத்தை ஊற்றச் சொல்கின்றன. அவ்வாறு
தருக்கிய ஆண்மைகள் தான் தன்னுடன் துய்த்தவளை ஊரறிய வலையேற்றி வேடிக்கை பார்க்கச்
சொல்கின்றன, அவ்வாறு தருக்கிய ஆண்மைகள் தான் தலைநகரில் ஓடும் பேருந்தில் தறி
கேட்டு ஆடத் தூண்டின.
ஆம், ஒவ்வொரு தருணத்திலும் தருக்கி எழவே அக்கீழ்மை
முயல்கிறது. அவ்வாறு தருக்கி எழுந்த ஆண்மைகளுக்கு பிழையீடு செய்யவே எஞ்சிய
ஆண்களின் வாழ்வு வகுத்தளிக்கப்பட்டிருக்கிறது!!! அன்று துவங்கி இன்றும், நாளையும்
அதை மட்டுமே செய்தாக வேண்டியதே புடவி படைத்த பிரம்மம் மாமயிடனுக்குக் கொடுத்த ஆம்
என்ற பதிலின் மறுபக்கம்!!! பலமுகம் கொண்ட வைரமாக மின்னுகின்றன பன்னிரு படைக்களத்தின்
பகடையுருட்டும் அத்தியாயங்கள்!!! ஒரு எழுத்தாளராக எண்ணி எண்ணி இறும்பூது
எய்தக்கூடிய பகுதிகளைப் படைத்து வருகிறார் ஜெ.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்