சொல்வளர்காடு இரு
முக்கிய பாரத ஆளுமைகளைத் தெளிவாகத் துலக்கியிருக்கிறது. முதலாவது திருதா.
மழைப்பாடலில் மைந்தனைப் பற்றிய அலரை ஒவ்வாமல் ஏற்று அவனைக் காடேக அனுப்ப
முடிவெடுக்கும் சமயத்தில் அன்னை அம்பிகையின் குறுக்கீட்டால் தவிர்க்கிறார் திருதா.
அப்போது தான் என்றுமே தன் மைந்தனைக் கைவிடப்போவதில்லை என்ற முடிவினை எடுக்கிறார்
திருதா. இதில் முக்கியமான ஒன்று இருக்கிறது. அவர் அவனை விட்டுத் தரப்போவதில்லை,
அவனை இழக்கப் போவதில்லை, அவனை இறக்கவிடப்போவதில்லை என்ற வகையிலேயே அவரின்
இக்கூற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே திருதாவின் நிலைக்குணம். அவருடைய
அனைத்து ஆளுமையும், செயல்களும் இவ்வாதார குணத்தைச் சுற்றியே
பின்னப்பட்டிருக்கின்றன. அவரின் பீமனின் மீதான அன்பு, தருமனுக்கு மணிமுடியை
விட்டுத்தர துரியனை நிர்பந்திப்பது, அவனை அடித்து வீழ்த்தியதன் மூலம் அவன் செய்த
வாரணவத எரி நிகழ்வைக் கடப்பது, சூதாட்டத்திற்குப் பிறகும் பாண்டவர்களுக்கு
இந்திரபிரஸ்தத்தைத் தருவது, அனைத்துக்கும் மேலாக திரௌபதியிடம் சென்னி சூடி
மன்னிப்பு கோருவது என அனைத்திற்குமே அவர் மைந்தன் உயிரிழக்கலாகாது என்ற தந்தையின்
தவிப்பே ஆதாரம். இன்று அவர் பாண்டவர் மண்ணோடு மண்ணாகிப் போக வேண்டும் என்று
விழைவதற்கும் அந்த நிலைக்குணமே காரணம். அப்படியென்றால் அவர் தன் தம்பியரின் மீது
கொண்ட பாசம்? அவரின் இயல்பான பெருந்தன்மை? அவர் பாண்டவர்கள் மீது செலுத்திய பாசம்?
அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றறிகையில் கொண்ட ஆனந்தம்? அவையெதுவும்
பொய்யல்ல, நடிப்பல்ல, அவையும் அவரது இயல்புகளே. அவையனைத்தும் சேர்ந்தவையே அவரது
ஆளுமை. ஆனால் அந்த பெருந்தன்மை அவரது ஆதார குணம் அல்ல. அது ஒரு காலத்தில் அவரின் நிலைக்குணமாக இருந்தது. துரியன் பிறக்கும் முன்பு வரை.
குறிப்பாக பீமனை அவர் காணும் வரை. அதன் பிறகு அவரின் ஆளுமையின் ஆதாரம் அவர் தந்தை
என்பது மட்டுமே. தன் ஆளுமை வெளிப்படுகளுக்கிடையே ஒரு முரண் தோன்றுமென்றால்
ஆளுமையின் ஆதார குணத்திற்கே அவை திரும்பும். மிகச் சிறந்த உதாரணம் பிரயாகையில்
வரும் தருமனின் கடிதம் – அக்கடிதத்தை திருதா முழுமையாக நம்புகிறார், நம்ப
விழைகிறார். அதன் மூலம் மக்களுக்கும், அரண்மனைக்கும் துரியன் மீதிருந்த சந்தேகம்,
பழி நீங்கும் என நம்புகிறார். அது தன் மகன் நலம் நாடும் தந்தை என்ற ஆதார குணமே.
மற்றுமொரு உதாரணம் தற்போது அவர் விதுரர் மீது, அவர் மைத்ரேயரை அழைத்து வந்தமைக்காக
கொள்ளும் அளப்பரிய சினம். அதற்கும் தன் மகன் நலன் நாடும் தந்தை என்ற ஆதார குணமே
காரணம். தம்பியா, தனயனா, மனைவியா, மகனா என்று முரண் வந்தால் அவர் துரியன் என்றே
முடிவெடுப்பார்.
இக்குணங்களை எவ்வாறு
புரிந்து கொள்வது? பின்வருபவை ஈரட்டியிலும், சென்னை விவாத அரங்கிலும் ஜெ உரைத்தவை.
கதாபாத்திரங்களின் செயல் வெளிப்பாடுகளை ஆராய ஒரு முக்கியமான கருவி, இந்த ஆதார
நிலைக் குணம் பற்றிய தெளிவு. இதை ஒரு கம்பை மையப்படுத்தி ஆடும் நடனத்திற்கு
ஒப்பிடலாம். ஒரு ஆளுமையின் வெளிப்பாடுகள் அனைத்துமே அந்த ஆதார குணத்தைச் சுற்றி
ஆடப்படும் நடனங்களே. எவ்வளவு வளைந்தாலும் அந்த கம்பிற்கே வந்து சேரும் நடனம் போல்
ஒரு ஆளுமையின் ஆதார குணத்திற்கே இறுதியில் அந்த ஆளுமை வந்து சேரும். திருதா
என்றில்லை, எந்த ஒரு ஆளுமைக்கும் இத்தகைய ஒரு ஆதார நிலைக்குணம் இருக்கும். அதுவே
அவர்களை தகவமைக்கும். அவர்களின் செயல்பாடுகள் எதுவாயினும் இறுதியில் இந்த ஆதார குணத்திலேயே
வந்து சேர்வர். சில சமயங்களில் கதாபாத்திரங்கள் அவர்களின் ஆதார குணத்திற்குச்
சற்றும் தொடர்பில்லாத ஒரு செயலைச் செய்வர். அச்ச்செயல் அந்த ஆதார குணத்திற்கு
முற்றிலும் எதிரான திசையில் கூட இருக்கலாம். அவர்கள் வாழ்வையே மடைமாற்றுவதாகக் கூட
இருக்கலாம். அத்தகையவற்றை விஸ்லேஷணம் என்று கூறுவர். இத்தகைய விஸ்லேஷண
மனவெளிப்பாடுகள் எங்கோ அவர்களின் கனவுள்ளத்தில் (ஸ்வப்னம்) அல்லது ஆழுள்ளத்தில்
(சுஷுப்தி) ஒரு மிகச் சிறிய பரமாணுவாக இருந்திருக்கக் கூடும். அவை நனவுள்ளத்திற்கு
(ஜாக்ரத்) வருகையில் பிரம்மாண்டமான ஒரு செயலாக, ஒரு விளைவை ஏற்படுத்துவதாக மாறும்.
“ஸ்வப்னத்தில்
இருந்து ஒரு கூழாங்கல் விழுந்தால் ஜாக்ரத்தின் மாளிகைகள் நொறுங்கிச்சரியும்
என்கிறார்கள்” என்கிறது
வெண்முரசு. உதாரணத்திற்கு துரியனும், கர்ணனும் மற்றும் பன்னிரு படைக்கள
அவையிலிருந்த அனைத்து ஆண்களும் முழு ஒப்புதலோடு நிகழ்த்திய திரௌபதியின் மீதான
கீழ்மை அத்தகைய விஸ்லேஷண வெளிப்பாட்டிற்குச் சிறந்த உதாரணம். அவர்களில் எவர்
ஒருவரின் ஆளுமையும் அத்தகையதல்ல, அக்கீழ்மை அவர்களின் நிலைக்குணமும் அல்ல.
இருப்பினும் அனைத்து ஆண்களின் கூட்டு நனவிலியில் இருந்த பெண்ணைக் கீழடக்கும், கடந்து
வென்று சென்று எக்களிக்கத் தூண்டும் கீழமை என்னும் அணுவினும் சிறிதான ஒன்று
வெளிப்படுகையில் கொள்ளும் பேருரு அந்நிகழ்வு.
இவ்வகையில்
பார்த்தால் பீஷ்மர் துரியனை அரசனாக ஆதரிப்பது என்பது விஸ்லேஷணமா? அதன் பதிலை
ஆராயப் புகும் முன், வெண்முரசு பாரத நிகழ்வுகளுக்கு நல்கும் முக்கியமான ஒரு
துலக்கத்தைக் காண்போம். அது திருதா தன் மகன் அரசனாக வேண்டும் என்ற விழைவு உடையவர்
அல்ல என்பது. அவரைப்பொறுத்த வரை தன் மகன் உயிரோடும், நலமோடும் இருக்க வேண்டும்.
அப்படியென்றால் அவன் அரசன் என்று நிலைப்பெற, அரசன் என்றே ஆள குரு வம்சத்தில் விரும்பியர்
யார்? பீஷ்மர். மழைப்பாடலிலேயே இந்நிகழ்வு தெளிவாக வந்திருக்கிறது என்றாலும்
இப்போது தான் அது புரிகிறது. பீஷ்மரின் ஆதார நிலைக்குணம் என்ன? அவர் பீஷ்மர்
என்பது தான். அதாவது செயற்கரிய செயலைச் செய்யும் ஒருவர், தன் சொல்லைக் காப்பவர்,
தன் வாக்கை தன்னறமாகக் கொள்பவர். இங்கே துரியன் அரசாள்வான் என்பது அவர்
காந்தாரனுக்குக் கொடுத்த வாக்கு. அவ்வாக்கைக் காப்பதே அவர் சுயதர்மம். அதற்காக, அந்த
ஆதார குணத்தை நிலை நாட்டவே அவர் துரியனைத் தாக்குகிறார். இதற்கும் திருதா அவனைத்
தாக்கியதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் இந்த தாக்குதல் மூலம் அவன்
செய்த தவறுகளைத் தாண்டி வருகின்றனர். அந்த வாக்கே பீஷ்மர் நாட்டை இரண்டாகப்
பிரிக்க ஒப்பியது. அந்த வாக்கே அவரை “எங்கே காந்தாரன்? இப்போதே அவன் இங்கு
வந்தாகவேண்டும்!”, என சகுனியைத்
தேடச் செய்கிறது. அவர் துரியனைத் தாக்கும் அத்தியாயத்தில் அவர் அழைத்ததென்னவோ
துரியனைத் தான். ஆனால் எதிர்பார்ப்பது சகுனியையும் கூடத் தான். ஏனென்றால்
அவனுக்குத் தானே இந்த வாக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாக்கைக் காப்பாற்றத்
தானே அவர் மேலும் மேலுமென கீழ்மைகளுக்குள் செல்கிறார். எனவே பீஷ்மர் துரியனை
ஆதரிப்பதும், அவன் படையை நடத்துவதும் எல்லாம் அவரின் ஆதார குணமேயன்றி விஸ்லேஷணமல்ல.
தங்கள் சொல்லால்
கட்டுண்டு, தங்கள் ஆதார குணத்தை அச்சொல்லால் வடித்துக் கொண்ட இருவரின் ஆளுமைகளை
சொல்வளர்காடில் துலக்கியது சாலப் பொருத்தம். மீண்டும் மீண்டும் வெண்முரசின் வடிவ
ஒருமை வியப்பூட்டுகிறது!!.
அருணாச்சலம் மகராஜன்