தன் ஆணையை அல்லது தன்
உந்துதலால் திருதாவால் பிறப்பிக்கப்பட்ட பாண்டவர்களுக்கு அரசைத் திருப்பியளிக்கும்
ஆணையை பீஷ்மர் தடுத்த பிறகு இரு நாட்களுக்கு விதுரரை யாரும் காண்பதில்லை. இறுதியாக
அவரை அவரது கரவறையில் நினைவிழந்த நிலையில் கண்டடைகிறார்கள். இப்போது திருதா
தன்னிடமிருந்து முற்றிலும் விலகி விட்டதை உணர்ந்து கொள்ளும் விதுரர் தன்
பொறுப்புகளைத் துறந்து நகர் நீங்குகிறார். இரண்டு தருணங்களிலும் முக்கியமான ஒன்று
இருக்கிறது, அது அந்த அஸ்வதந்தம் என்னும் வைரம். அது பாண்டுவால் விதுரனுக்கு
அளிக்கப்பட்டது. பாண்டுவுக்கு அவனுடைய பாதி ராச்சியத்திற்கு இணையாக திருதாவால்
அளிக்கப்பட்டது. அவ்வைரம் விதுரனைப் பொறுத்த வரை அஸ்தினபுரி தான். அதை அவர்
பார்த்துக் கொள்வது என்பது அஸ்தினபுரி அவரது ஆணைக்குக் கீழ் இருக்கிறது என்ற
எண்ணத்தை அவரே உறுதிப்படுத்திக் கொள்வது போன்றதே. இதை மிகச் சரியாக உணர்ந்தவர் இருவர்.
ஒருவர் குந்தி. அவர் தன் ஆணை நிற்பதன் மூலம் அரசாள்வதாக எண்ணிக்கொண்டிருக்கும்
அந்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டாரா என்பதை அறியவே அவர் அந்த வைரத்தை
வீசினாரா என்று வினவுகிறாள். இல்லை என்றதும் நிறைவுறுகிறாள்.
மற்றொருவர் சுருதை
அன்னை. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் விதுரர் நிலையழிந்திருக்க மாட்டார்.
மிகச் சரியாக அவர் ஒரு முறை விதுரரிடம் கொந்தளிக்கையில், “நீங்கள் இவ்வுலகில் எதையும் வென்றெடுக்க முடியாது. அதை என்று உணர்ந்துஉங்கள் ஆசைகளை களைகிறீர்களோ அன்றுதான் விடுதலை அடைவீர்கள்” என்று உரைக்கிறார். இவ்வுரையாடல் நிகழ்வதற்கு முன்பு தான் கிருஷ்ணன்
விதுரரை அவர் சூதர் என்று கிட்டத்தட்ட மிரட்டிச் சென்றிருப்பான். பீஷ்மரும் மிக
நாசூக்காக விதுரர் கிருஷ்ணனிடம் அஸ்தினபுரியின் படைகள் அவர் ஆணையின் கீழ்
இருக்கின்றன என்று சொன்னது தவறு என்று சொல்லியிருப்பார். இவர்களுக்கெல்லாம் முன்பே,
இள விதுரன் அந்த வைரத்தை எடுத்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அந்த வைரம் அங்கே
இருக்கிறது என்ற எண்ணத்துடனேயே மகிழ்வுடன் விடியும் காலைகளைக் கொண்டிருந்த
காலத்தில், குறிப்பாக பாண்டு காடேகிய பிறகு அஸ்தினபுரி இயல்பு நிலைக்குத் திரும்பி
வந்து கொண்டிருந்த காலத்தில், அவன் சந்திக்கும் ஒரு சார்வாகன் – “உன் விழைவை கண் கூர்ந்து பார்… அஞ்சாதே”
என்கிறான். அந்த சார்வாகன் சொல்லியது இது தான். “நீ உண்மையிலேயே
அரசனாக விரும்புகிறாயா? அது தான் உனக்கு இவ்வுலக வாழ்வில் நீ அடையக் கூடிய
உச்சபட்ச இன்பமா?.” விதுரரால் அந்த எண்ணத்தையே ஏற்றிருக்க இயலாதே. அவர்
என்றும் தான் அண்ணனுக்கு அடிபணிந்திருக்கும் தம்பி மட்டுமே என்றல்லவா
இறுமாந்திருக்கிறார்?!
அவராவது அண்ணனின் ராச்சியத்தின் மீது ஆசை கொள்வதாவது?! இது பொய் அல்லவா!!.
மிகச்
சரியாக அந்த சார்வாகன் சொல்கிறான் – “அழிவற்ற சார்வாக ஞானம்
இருமுனைகொண்ட கூர்வாள். அது பிறரது பொய்மையை வெட்டும். தன்னுடைய பொய்மையையும்
வெட்டும்”. இவை எவற்றையுமே
விதுரர் புரிந்துகொள்ளவில்லை. அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை. இதோ இன்று
மிகப் பெரிய ஒரு வீழ்ச்சியை, இன்றியமையாத ஒரு வீழ்ச்சியை அடைந்திருக்கிறார். இந்த
நகர் நீங்கல் வாயிலாக அவர் தன் எல்லையுணர்ந்து மீண்டால் நன்று.
அருணாச்சலம் மகாராஜன்