Monday, August 1, 2016

விழைவு




பாண்டவர்கள் காடேகும் காட்சியை சௌனகர் விவரிக்கும் ஒவ்வொரு கணமும் மனம் வாழ்வின் அணைத்து திசையிலும் பரவி அனைவரின் நிலையிலும் சிக்குண்டு எல்லாம் சரிசரி என்றே எண்ணி நிலைக்கொண்டது.

தருமன் செய்தது சரி, நான்குபாண்டவர் செய்தது சரி, திரௌபதி செய்தது சரி, திருதராஸ்டிரன் செய்தது சரி, துரியோதனன்செய்தது சரி,கர்ணன் செய்தது சரி, துச்சாதனன் செய்தது சரி, கீர்மிகன் செய்தது சரி, விதுரர் செய்தது சரி, பீஷ்மர் செய்தது சரி, காந்தாரி செய்தது சரி, குந்திதேவி செய்தது சரி என்று அனைவர் செய்வதும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் எல்லாம் எப்படி சரியாக இருக்கமுடியும். உண்மை என்று ஒன்று உள்ளது அது எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. உண்மையை நாம் ஐயப்படாலம், உண்மையை திரிக்கலாம் ஆனாலும் உண்மை அறிவில் இணைந்த உண்மை என்பது எப்போதும் மாறாத ஒன்றுதான். அந்த உண்மைதான் என்ன? 


இன்று வெண்முரசு அனைத்திலும் இருந்து விலகி நின்று உண்மையில் வந்து நின்று நிலைபேறு அடைகிறது. செளனகர் நீதியின் வழியாக.வெண்முரசு வந்து அடைந்த இடம் அற்புதம் ஜெ.இந்த நீதியை சொல்ல எத்தனை எத்தனை பாத்திரங்கள் வழியாக வாழ்க்கை எங்கெங்கு ஓடிவிளையாடுகின்றது. ஓடிவிளையாண்ட வாழ்க்கை மத்தென சுழன்று உண்மையை வெண்ணையென திரளச்செய்கிறது. விழைவே வாழ்வின் உண்மை..

 
வாழ்வின் உண்மையென திரண்டெழும் விழைவு தூய்மையானதா? விழைவு தூய்மையானது என்றால், திருதராஸ்டிரன் விழைவும். சூதில் தருமனின் விழைவும் சமமானதே.சரியானதே. தன்பொருட்டு மட்டும் விழைவுக்கொண்டு பாண்டவர்களை காடேகச்சொல்லும் திருதராஸ்டிரன் ஒருபக்கம். தன்விழைவை மட்டும் முக்கியமெனக்கொண்டு பாஞ்சாலியை பணையம் வைத்த தருமன் ஒருபக்கம் சரிக்கு சரி. ஆனால் திருதராஸ்டிரன் இன்னும் இன்னும் என்று திருஷ்ணையை அள்ளிப்பூசி பெருத்துக்கொண்டு வளர்கிறான். தருமன் சூதாட்டத்திற்குபின்பு தன்பொருட்டு மட்டும் என்ற விழைவாகிய திருஷ்ணையை விட்டுவிடுகின்றான். அந்த இடத்தில் தருமண் அறவோனாக உயர்ந்துநிற்கின்றான். 


//“தன்பொருட்டு மட்டும் கொள்ளும் விழைவே திருஷ்ணை எனப்படுகிறது. உயிர்களனைத்தையும் ஆட்டுவிக்கும் பெருவிசை அதுவே. புள்ளும் புழுவும் அச்சரடால் கட்டப்பட்டுள்ளன. கைகளும் கால்களும் சிறகுகளும் துடுப்புகளும் கொம்புகளும் அதனால்தான் ஆட்டுவிக்கப்படுகின்றன. விழைவிலிருந்து விலக உயிர்களால் ஆகாது. ஆனால்  திருஷ்ணையிலிருந்து விடுபடுபவனே சிறந்த அரசன். அவனை ராஜரிஷி என்று கொண்டாடுகின்றனர் வைதிகர்.”//

 
இந்த நீதியை விளக்க கதையை அற்புதமாக சித்திரவேலைப்பாடு செய்து பட்டுக்கம்பளம் என நெய்திருக்கிறீர்கள் ஜெ. நன்றி.