அன்புள்ள ஜெ
கிராதம் வழக்கம்போல உக்கிரமாக ஆரம்பித்திருக்கிறது. வெண்முரசு வரிசை நாவல்களின் பலவே அதன் அடர்த்திதான். சுருக்கமாகவும் செறிவாகவும் தத்துவங்களும் வரையறைகளும் தகவல்களும் அளிக்கப்பட்டிருக்கும். நிறைய சந்தர்ப்பங்களில் முதல் வாசிப்பிலே அதையெல்லாம் தவறவிட்டுத்தான் செல்வோம்.
வெண்முரசு கிராதம் வாசித்துச்செல்லும்போது காலப்பேருருவன் என அச்சொல்லை விரித்தவர் பைரவர். தன்னை ஒறுத்து எஞ்சுவதே அது எனக் கொண்டவர் மாவிரதர். இங்குள அனைத்தும் அன்றி பிறிதே அது என உணர்ந்தவர் வாமர். இருளுருவெனக் கண்டவர் காளாமுகர். இறப்புருவென எண்ணுபவர் காபாலிகர். இப்பசுவை ஆளும் பதி என முன்னுணர்ந்தவர் பாசுபதர். என்ற வரி இரண்டாம் முரையாகத்தான் கண்ணுக்குப்பட்டது
ஒரே வரியில் ஆறுவகை சைவமரபுகளும் வகுத்துரைக்கப்பட்டுவிட்டன. இந்த வரியை மனப்பாடமாக வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்
சிவப்பிரசாத்