Sunday, January 1, 2017

மறுமுகங்கள்



அன்பு ஜெமோ சார்,

                 கடந்த இரண்டு வருடங்களாகவே எனக்கொரு கிறுக்கு, வெண்முரசு கிறுக்கு. எங்கே எதைக் காண்பினும் வெண்முரசோடு   தொடர்புபடுத்தி யோசித்து விடுவேன். விருதுவிழாவில்   தாங்கள் பேசிய வேறு வேறு அணில்கள் பற்றி கேட்டவுடன், ஏற்கனவே  பலமுறை அசை போட்ட ஒன்று தீவிரமானது.

          வெண்முரசில் வரும் திரௌபதி-மாயை, சகுனி-கணிகர், திருதராஷ்டிரர்-விப்ரர்  இவர்கள் ஒருவரே இருவராக வருவதாகத் தோன்றுகிறது. சிந்தனையின் போக்கு சரியா? பிழையா? சரி அல்லது பிழை என்று ஒற்றை சொல்லிலாவது பதில் சொல்லி  விடுங்க சார். ஏனென்றால்  'சிவஹோம்' என்ற ஊழ்கச்சொல் 'சிவமேயாம்' என்றானதை
‘அஹம் பிரம்மாஸ்மி' என்ற ஆப்தவாக்கியம் அவ்வாறானது என்று புரிந்து கொண்டது போல் ஆகிவிடக்கூடாது.


இரா.சிவமீனாட்சிசெல்லையா


அன்புள்ள சிவா 

ஒருவரை பலராகக் காட்டுவதென்பது புராணங்களின் வழிமுறை. ராவணனின் அம்சங்கள்தான் கும்பகர்ணனும் இந்திரஜித்தும். அதை கம்பனே சொல்லவும் செய்கிறான்

இது உண்மையில் நிகழ்வதும்கூட. ஆல்டர் ஈகோ என்று அதைச் சொல்வார்கள். அது ஓர் உத்தி. அதனூடாக எது வெளிப்படுகிறதென்பதே முக்கியமானது

ஜெ