Sunday, January 1, 2017

அடிமுடியில்லாமை




அடிமுடியில்லா பேர் இறை ஒரு முகமாக  ஒரு பொருளாக ஒரு சொல்லாக ஒரு விளையாடலாக ஒரு ஆனந்தமாக  எனறு ஐந்தாக  தன்னை காட்டி நடிக்கிறது என்ற புரிதலை ஏற்படுத்தும் அத்தியாயம் அற்புதம். ஐந்துக்கும் அப்பால் அது தன்னில்தானாய் முழுதாய் குறைவின்றியும் நிற்கிறது.

அடிமுடியில்லா பேர் இறையை ஆணவம் அறிவு ஆர்வம் விளையாட்டு என்று நான்கு திசைகள் வந்துமோதி அகழ்ந்து பறந்து நின்று விளையாடி காணமுல்கிறது. நான்கும் நான்கை அறிகிறது. நான்கும் நான்கை அறிந்ததால் அறிந்த நான்கும் அர்ததப்படுகிறது. எது எதற்கு எப்படியோ அது அதற்கு அப்படியே என்று பேர் இறை நிற்கிறது. 

ஆணவம் கொண்ட நான்முகனுக்கு செந்தாழம்பூ என்னும் பொருளாக நின்று திசைமணக்கிறது. ஆழ்ந்து ஆழ்ந்து அளந்து அளந்த அறிந்து அறிந்து பணிந்து பணிந்து செல்லும் திருமாலுக்கு பொருள் உறங்கும் மந்திரச் சொல்லாக. எது எப்படியோ அது அப்படியே இருக்கட்டும் என்று ஆர்வத்துடன் காணவந்த நாரதருக்கு நடனமாக. தன்னை முன்னிலைப்படுத்தாமல் தன் விளையாடலை முன்னிலைப்படுத்தும் அகத்தியருக்கு உள்ளொளி பெருக்கும் கமண்டலதீபமாக. நான்கிலும் அது முழுதாக நிற்கிறது. நான்கிலும் அது ஆனந்தத்தை பொதிந்து வைத்து தான் குறையாமல் முழுதாக நிற்கிறது.

நான்கிற்கும் அப்பால் அது ஆணவத்தாலோ அறிவாலோ  ஆர்வத்தாலோ விளையாட்டாலோ காணாத ஒரு உணர்வுநிலைக்கு தன்னை பதி என்று அவளில் பதித்தும் காட்டுகிறது. அவள் மற்றதை அறியவில்லை அறிய முயலவும் இல்லை. முயலுதல் தேவை இல்லை என்று வேலுடைவனுக்கு வேலும் தருகிறாள்.
ஐந்தாகி நிற்கும் அந்த பேர் இறை முற்றும் தான் தனியாகவும் நிற்கிறது. தன் வல்லமை அது என்று காட்டுகின்றது.
ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே  -திருமந்திரம்

அறிந்த கதைதான் இன்று  அரிபுதுபொருள்கொண்டு வந்து பூத்து அழகு செய்கிறது அறியவைக்கிறது. அற்புதம் ஜெ. நன்றி பல.

அன்புடன்
ராமராஜன் மாணி்க்கவேல்.