Thursday, February 2, 2017

மந்தனும் மந்திகளும்



வெண்முரசின் ஒவ்வொரு பகுதியும் நள்ளிரவில் உள்பெட்டியில் வந்துசேர்கையில்  ஏற்படுத்தும் பரவசம் பலவருடங்களாக தொடருகிறது. இருப்பினும் இப்படி ஒரு நாவலுக்கும் அடுத்த ஒன்றிற்குமான இடைவெளிக்குபின்னர் வரும் அந்த புதிய அத்தியாயம் நள்ளிரவில் ஏற்படுத்தும் பரவசம் அளப்பறியது.. மாமலர் துவக்கத்திலேயே அனேக மலர்களுடன் தொடங்குகிறது.தெச்சியும் அரளியும் குருக்கத்தியும் செங்காந்தளும்  இருவாட்சியும் முல்லையும் . நந்தியாவட்டையுமாய் மலர்ச்சோலை கண்ணை நிறைக்கிறது.

 மந்திகளுடன் களித்திருக்கும் மந்தனையும், வழமை மாறாமல் சலிப்பும் சோர்வுமாய்  தருமனும், நகுல சகாதேவர்களுமாய் மெல்ல  விரிந்திருக்கிறது மாமலர்

 நீலத்தில் ராதைக்கு காதலையும் காமத்தயும் அள்ளி அள்ளித்தந்த செண்பகமும் மரமல்லியும் அந்திமந்தாரையும்,
மனோரஞ்சிதமும்,சம்பங்கியும் இன்னும் பல மலர்களும், இங்கே சலித்தும் சோர்ந்தும் இருக்கும் தருமனுக்கு வெறும் வண்ணக்குவளைகளாய், தேனேந்திகளாய் தெரிகிறது. எத்தனை அழகுடன் புற உலகிருந்தாலும் அகத்தில்  துயரிருப்பின் அவற்றிற்கு பொருளில்லைஅல்லவா?
//உள்ளிருந்து ஊறுவதே தவமென்றாகும்”// என்கிறார் தருமர்.  மகிழ்வும் அப்படி உள்ளிருந்தேதான் வரவேண்டுமல்லவா? மந்தனுக்கு இனிக்கும் காடு தருமனுக்கு சலிக்கிறது.

ஈரப்பாத்திகளில் மலர்ச்செடிகளும்  ஆற்றின்கரையும், குளிர்காற்றும் பசுங்செடிகளுமாய் அப்படியே கண்ணில் நிற்கிறது இந்த துவக்க ப்பகுதி பத்திகளுக்கிடையில் வந்த இந்த புலிப்பாதச் சுவடு images இன்னும் இந்த வாசிக்கும் அனுபவத்தை  கதைக்களத்திற்கு நெருக்கத்தில் கொண்டு செல்கிறது. மாமலரின் நாயகன், காற்றின் மைந்தன், மந்தன், பாண்டவர்களின் அடித்தளமான பீமனின் மாமலர்ப் பயணத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்

லோகமாதேவி