மாமலர் 15ல் ஷண்முகவேலின் ஓவியம் அபாரமாக இருக்கிறது. எல்லா ஓவியங்களுமே அப்படித்தான் எனினும் இந்த ஊர்வசியின் குகை ஆலயமும் அந்த சிலையும் கொள்ளை அழகு. குமின் சிரிப்பு உதடுகளும், இடையும், மடித்த காலொன்றும், காய்ந்த மலர்மாலையும், காலடியில் கிடக்கும் சருகுகளும், ஆடைகளின் மடிப்புகளும் குகையின் மேலே வளர்ந்த மரமோ செடியோ அதன் வேர்கள் சிலைக்கு பின்னல் இறங்கி வந்திருப்பதும் ஒரு இடிபாடின் வழியே உள்ளே சாய்வாக வந்த வெளிச்சம் சிலையின் ஒரு பகுதியை வெளிச்சப்படுத்தியிருப்பதும் அத்தனை அழகு. இது புகைப்படமல்ல ஓவியம் என்று மனது எத்தனை சொன்னாலும் கண்களால் நம்பவே முடியவில்லை. வண்ணங்களால் சாத்தியமாகுமா இப்படி ஓவியங்கள் என்றே ஒவ்வொரு முறையும் அசந்து போகிறேன்.
ஷண்முகவேலின் ஓவியங்கள் வெண்முரசு வாசிப்பனுபவத்தை இன்னும் இன்னும் மனதிற்கு நெருக்கமாக்குகிறது. வெண்முரசில் அந்த கோவில் எப்படி இருக்கும் என நினைக்கிறேனோ, அப்படியே ஓவியம் வருகையில் நேரில் காட்சியாகவே கண்டுவிட்டது போல இருக்கிறது சம்பவங்களெல்லாம். வாசிக்கையில்.
சில சமயம் அவர் வரையாத அத்தியாயதிற்கும் மனசில் இப்படித்தான் வரைந்திருப்பார் என நினத்துக்கொள்கிறேன்,சில நாட்களுக்கு முன்னால் ஒரு பகுதியில் ”ரீச் ”என கத்தியபடி ஒரு குரங்கு கோமதியில் குளித்து விட்டு வரும் பீமனுக்கு முன்னால் போய் அடுப்படியிலிருக்கும் திரெளபதியை அழைக்கயில் அடுமனையிலிருந்துவெளியே வரும் அவள் கன்னத்தில் நெருப்பின் ஒளி தெரிந்ததென்று வாசிக்கையில் ஷண்முகவேல் வரைந்தது போல ஓவியமொன்று மனதில் அப்படியே எழுந்தது. அவர் வரைந்தால் அந்த காட்சியைத்தான் வரைந்திருப்பார் எனஏண்ணிக்கொண்டேன். பாராட்டுக்களையும் தாண்டிய அவரின் இந்த கலை நிச்சயம் தெய்வக்கொடைதான்..
லோகமாதேவி