மாமலரின் மூன்றாவது பகுதி என்றென்றும் நினைவில் இருக்கும். சிறுமியாய் இருக்கும் போதிலிருந்தே மகாபாரதக்கதைகளை துண்டு துண்டாய் கேட்டு பாண்டவர் வனவாசம் என்றாலே கொடிய அடர்காட்டுக்குள் மனைவியுடன் துன்பப்படும் 5 அரசர்கள் தான் இத்தனை வருடங்களாக நினைவில் இருந்தது எனக்கு. இன்று இந்த பகுதி வாசித்தபின் வனவாசம் என்றாலே புடவையை தூக்கிச்செருகிக்கொண்டு நீர் ஊற்றும் திரெளபதியும். உடல் தேய்க்கும் தம்பிகளும், தொலைவில் இருந்து ரசித்துப்பார்க்கும் தருமனுமாய் அவர்கள் காட்டில் மகிழ்ந்திருந்ததுதான் இனி என்குடும்பத்தில் அனைவருக்குமே நினைவில் இருக்கும். எத்தனை அற்புதமான காட்சி இது? பார்த்தன் இல்லாததுதான் குறையாக இருக்கிறது.. பார்த்தனும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான் என ஊகிக்கமுயன்று தோற்றேன்.
சாம்பால் நிற குரங்குக்குட்டிகளின் கூட்டமும் அவற்றின்சேட்டையுமாய் காலையில் பேருந்தில் கல்லூரிக்கு செல்கையில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வாசித்ததில் இருந்து இப்போது வரை அவற்றின் நினைவாகவே இருக்கிறது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வெண்முரசு வாசிப்பனுபவம் போல ஆழ்ந்து வாசிக்கும் அனுபவமும் நிறைவும் இதற்கு முன்னர் வேறு எப்போதும் இருந்ததில்லை இனியும் இருக்காது.
லோகமாதேவி