கிரிப்பிரஸ்தத்தின் கரவுக் காடு ஒரு அபாரமான உருவகம். அது
ஒருவகையில் அந்த நகரின் ஆழ்மனம். கிரிபிரஸ்தத்தின் மறு பெயர் விராடபுரி அல்லவா.
ஏற்கனவே விராடமாக இருக்கும் ஒன்றின் ஆழ்மனம் (துரியம் அல்லது கூட்டு நனவிலி
எனலாமா!!) என்ற வகையில் அக்கானகம் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகத் தானே இருந்தாக
வேண்டும். எனவே தான் அக்கானகத்தில் இருந்து நகர மாந்தருக்கு விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல விலக்கியவைஎல்லாம் பேருரு கொண்டு மனதை
நிறைப்பது போல, நகரமே அக்கானகத்தைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறது,
ஒவ்வொருவரும் தத்தமது ஆழ்மனதை எண்ணி இருப்பது போல. அந்த ஆழத்தைக் கண்டவர்கள்
பித்தாவது தான் இயற்கை. பித்தாகாமல் வெளிவர குருவருள் வேண்டும். அந்த ஆழம்
மஞ்சளையும் பொன்னாக்கும். அங்கு பொன்னாக இருப்பதற்கு இங்கு எப்பொருளும்
இருப்பதில்லை. இவையெல்லாம் முக்தனின், தீர்க்கனின் பார்வையில் நமக்கு முன்பே
தரப்பட்டு விட்டன. இக்கானகம் நீர்க்கோலத்தில் முக்கியமான இடம் வகிக்கப்போகிறது.
விராட பர்வத்தின் கந்தர்வ நிகழ்வுகள் இங்கு தான் நிகழப்போகின்றன அல்லவா?
அன்புடன்,
அருணாச்சலம்
மகராஜன்