நீர்க்கோலத்தில் மாற்றுரு
கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிமுகம் தரப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக
வித்தியாசனமான ஒரு அறிமுகம் அர்ஜுனனுக்குத் தான். பிரஹன்னளை விராடபுரியின் ஆழ்மனம்
என்றே எண்ணத்தக்க, அந்த கரவுக் கானகத்தின் ஆழ் இருளுக்குள் இருந்து
வெளிப்படுகிறாள். அவளைப் பார்க்கும் முக்தனுக்கு அவள் ஆண் தன்மை கலந்த பெண்ணாகவும்,
உத்தரைக்கு பெண்ணின் நளினம் கொண்ட ஆணாகவும் காட்சியளிக்கிறாள். எந்த ஒரு பெண்ணுக்கும்
அவர்கள் உள ஆழத்தில் இருக்கும் ஒரு கனவுக் காதலனை நினைவூட்டும், அக்காதலனனின்
முகமாகச் சென்றமையும் ஒரு ஆணைக் காண்பதே கன்னி வாழ்வின் உச்சமாக இருக்கக்கூடும்.
அக்காதலன் முன் அவள் பாதுகாப்பாக உணர்வாள், நிமிர்வாக இருப்பாள். இங்கே உத்தரைக்கு
பிரஹன்னளை அப்படிப்பட்ட ஒருத்தியாக (ஒருவனாக!!) இருக்கிறாள். எனவே தான் பிரஹன்னளை ஆழ்மன
ஆழத்தில் இருந்து வெளிப்படுபவளாக அறிமுகப்படுத்தப்படுகிறாள். மேலும் அந்த
அறிமுகத்திலேயே அவள் அது நாள் வரை உத்தரையைப் பின்தொடர்ந்த அரவுக்கு முறிவும்
அளிக்கிறாள். அவள் அச்சத்தைப் போக்குகிறாள். அமர்ந்து ரசிப்பதற்கு பல தருணங்களைக் கொண்டதாக இருக்கிறது
நீர்க்கோலம்.
அருணாச்சலம் மகராஜன்
இந்த கரவுக் கானகத்தில் சுபாஷினியை உத்தரையுடன் இருக்கச் சொல்லும்
சைரந்திரியின் ஆழமன வெளிப்பாட்டை மிகவும் ரசித்தேன். என்ன இருந்தாலும் தன்
கணவனைப் பற்றிய உண்மையை அறிந்தவள் அல்லவா அவள்...