Saturday, July 29, 2017

மணிச்சங்கம்

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம் நலம்தானே? நேற்று புதுவை வெண்முரசு கூடுகைக்கு அழைத்திருந்தனர். நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் முழு வாசிப்புடன் வந்திருந்தது மகிழ்வாக இருந்தது. நண்பர்கள்திருமாவளவன்,நாகராசன், மணிமாறன் அரிகிருஷ்ணன் ஆகியோருடன் நானும் உரையாற்றினேன். என் உரையின் சுருக்கத்தைத் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன் நன்றி


வளவதுரையன் 




மணிச்சங்கம்


மூல பாரதங்களில் அம்பை பேசப்பட்ட அளவுக்கு அம்பிகை அம்பாலிகை பற்றிப் பேசப்படவில்லை; வெண்முரசில் அவர்களுக்குச் சரியான அளவிற்குப் பங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையும், அம்பாலிகையும் தேரில் அஸ்தினாபுரம் நுழைவதிலிருந்து இப்பகுதி தொடங்குகிறது.

அம்பையைப் பொருத்தமட்டில் சினத்தின் முழு உரு; பழிவாங்கும் எண்ணம் கொண்டவள்; எளிதில் உணர்ச்சிவயப்படுபவள்; அம்பாலிகையைப் பொருத்தமட்டில் அவள் ஒரு விளையாட்டுப் பெண்ணாகக் காட்டப்படுகிறாள். ‘பாண்டு’ என்னும் பொம்மையை வைத்து விட்டு வந்ததற்காக வருந்துகிறாள். பின்னால் பாண்டு அவள் வழி பிறக்கப்போவதும், அவன் பொம்மையாக இருக்கப் போவதும் இங்கு மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.

அத்துடன் சிறுபிள்ளைகள் கோள் சொல்வதுபோல், அவள் அம்பாலிகையிடம், “மறுபடி கிள்ளினால் பீஷ்மரிடம் சொல்லி விடுவேன்” என்கிறாள். பாதி அம்பை, மறுபாதி அம்பாலிகை இதுதாம் அம்பிகையாவாள். அம்பை தன் வாழ்வைச் சரியாக முன்கூட்டியே தீர்மானித்து விட்டாள். யாரை மணக்க வேண்டும் என முடிவெடுத்து விடுகிறாள். அம்பாலிகையோ தன் வாழ்வில் எது வரினும் ஏற்றுக்கொள்ளும் முடிவில் இருக்கிறாள். பீஷ்மருடன் வந்தாயிற்று எதுவந்தாலும் சரி என அவள் எண்ணுவது ஆற்றுவழிப்படும் தெப்பம்போல அவள் செல்லத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

ஆனால் அம்பிகை இறங்கும்போதே கண்களை மூடிக்கொண்டு தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளை கண் பார்வை இல்லாதவன்தான் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறாள். தவிர இப்படி சிறையெடுக்கப்பட்ட்தே அவளுக்குப் பிடிக்கவில்லை. “நாளை நம் படைகள் இந்நகரை வென்றுவிடும்; செல்வச் செருக்கையும் பெருந்தோற்ற விரிவையும் பார்க்கக்கூடாது” எனக் கூறுகிறாள். ஆனால் விதியின்வழி வேறுவிதமாய் இருக்கிறது.

தொன்மங்களில் விதி ஒரு தவிர்க்க முடியாத அம்சம். ”விதி பிடர் பிடித்து உந்துகிறது” என்பான் கும்பகர்ணன். ”நதியின் பிழையன்று; பதியின் பிழையன்று; இது விதியின் பிழை” என்பான் இராமன்; மேலும் இழைக்கின்ற விதி முன்செல்லக் கானகம் கிளம்புவான் இராமன். அம்பிகையின் வாழ்விலும் விதி அவளை மாற்றுகிறது. அதை ஜெயமோகன் தொடங்கும்போதே ஒரு உவமை மூலம் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.

”பல்லியின் திறந்த வாய்க்குள் ஏதோவிதியின் கட்டளைக்கேற்ப என நுழையும் சிறு பூச்சி போல அவள் சென்று கொண்டிருந்தாள்” என்பது அவள் வாழ்வு அவள் எண்ணப்படி அமையவில்லை என்பதை உணர்த்துகிறது. முதலில் அவ்வளவு தீவிரமாக சிறையெடுத்ததை எதிர்க்கிறாள். “நாம் என்ன பிழை செய்தோம்” என்க்கேள்வி கேட்கிறாள். “நாம் மிருகங்களா” என்று சினத்துடன் பேசுகிறாள்.சத்தியவதியிடம் மணமுறைகள் பற்றி விவாதம் செய்து வாய்ச்சொல்லிடுகிறாள். சத்தியவதியின் வாதம் இந்த இடத்தில் மிக நன்றாகக் காட்டப்படுகிறது. “கவர்ந்து வந்தபோதே பிற மணமுறைகள் இல்லாமல் போய்விட்டது. என்கிறாள் சத்தியவதி. அம்பிகையோ “என் வயிற்றில் உன் ,மைந்தனின் கரு உண்டாக விடமாட்டேன்” என்கிறாள். மேலும், ”அப்படிப்பட்ட்ட சூழல் வருமாயின் நான் உயிர் துறப்பேன் என்கிறாள். இந்த இடத்தில் வாதத்தை நிறைவு செய்யும் விதம் ஜெ. வின் கைவண்ணத்தில்  மிளிர்கிறது.இறந்த பிறகு அந்த உடலின் ஆன்மா இவ்வுலகை விட்டு நற்கதி அடைய வேண்டுமானால் அதற்குக் கருமகாரியங்கள் நடைபெற வேண்டும் அன்றோ? அதைத்தான் ஜெ. புதுச் சொல்லாக உதகச் செயல்கள் எனக்குறிப்பிடுகிறார். இவ்வளவு மன எண்ணங்களுடன் அழுத்தமான கொள்கையுடன் இருந்தவள் மாறுவது விதியின் விளையாட்டுதானே? ஜெ. இதைப் பீஷ்மர் மூலம் நிறைவேற்றுகிறார்.

யாருக்கும் வணங்காத பிதாமகர் அவளிடம், “இது என்பிழை” என்றும் ””என்னைத் தீச்சொல்லிடுங்கள்” என்றும், ஏழு பிறவிகள் நரகத்தில் உழலுகிறேன்” என்றும் கூறும் போது அம்பிகையின் மனம் திடீரென மாறுகிறது. “கற்கோபுரம் வளையலமா? என்க்று அவரிடம் கேட்டு சத்தியவதியின் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறாள்.
     
முதலிரவு முடிந்த பின் ”இன்று கருநிலவு; கரு உண்டாக வேண்டிய நாள்; வீணாக்கி விட்டாயே” என்றெல்லாம் பேசும் சத்தியவதியிடம் விசித்திர வீரியன் சொல்லும் சொற்கள் முதல் இரவில் ஓர் ஆண்மகன் நடக்கவேண்டிய விதத்தையே காட்டுகிறது. அவன், “வயலைப் பண்படுத்த வேண்டாமா?” என்று கேட்கிறான். மனைவியுடன் கலந்து பேசிமனத்தளவில் அவளைத் தயார் செய்ய வேண்டும் என்பது இங்குக் கம்பி மேல் நடப்பது போல் உணர்த்தப்படுகிறது.
     
அவையில் ஸ்தானிகர் எல்லாரையும் விளிக்கும்போது அனைத்துக் குடிகளையும் கூறுகிறார். அதாவது, ‘பூமிதரார், கடல் சேர்ப்பர், வேடர்தலைவர், ஆயர்குடி என்று அவர் அழைப்பது நால்வகை நிலக்குடிகளும் அங்கு வந்திருப்பது மட்டுமன்றி அவர்கள் எல்லாரும் மன்ன்ன் ஆளுகைக்கு உட்பட்டிருப்பதை மறைமுகமாகக் காட்டுகிறது. பூமிதரார் என்பது மருதத்தையும், கடல்சேர்ப்பர் என்பது நெய்தலையும், வேடர்தலைவர் என்பது குறிஞ்சியையும், ஆயர்குடி என்பது முல்லை நிலத்தையும் காட்டுகிறது எனலாம்.

இன்னும் இப்பகுதியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நேரமின்மையால் நிறைவு செய்கிறேன்.