நெருங்கி இருக்கும் பாறைகளுக்கிடையே தேள், பூரான் பாம்பு போன்ற நச்சுயிர்கள் இருப்பதை கண்டிருக்கிறோம். அதே பாறைகள் ஒன்றுக்கொன்று அவ்வளவாக நெருங்கியிருந்திருக்காவிட்டால் அவற்றுக்கிடையில் இத்தகைய உயிர்கள் வாழ்வது இயலாது போயிருக்கும். பாறைகளுக்கிடையேயான நெருக்கமே அந்த நச்சுயிர்களின் இருப்புக்கு காரணமாகிவிடுகிறது. அதைப்போன்றே உறவுகளால் நெருங்கியவர்களுக்கிடையில் பொறாமை, வஞ்சம் போன்றவை வளர்வதற்கான சூழல் அதிகம் உள்ளன. தன்னுடன் நீண்ட நாள் பழகி ஒன்றாக வளர்ந்த உறவினரிடம் அல்லது தன்னுடன் இணையாக பணிபுரியும் சக ஊழியரிடம், ஒவ்வொருநாளும் காணநேரும் பக்கத்து வீட்டினரிடம், ஏன் தன்னுடன் தோள் தழுவி நின்று நண்பராக இருந்தவரிடம் பொறாமையும் வஞ்சமும் இயல்பாக தலை தூக்குகின்றன.
சிலசமயம் இவை தாய்க்கும் மகளுக்கும் இடையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கூட தோன்றுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறோம். நெருங்கி இருந்த ஒருவர் தன்னை ஏதாவது ஒன்றில் விஞ்சும்போது பொறாமை அல்லது தன்னை விஞ்சி விடுவானோ என ஐயுற்று பொறாமை, இதுவரை தனக்கு கீழாக இருந்தவன் தனக்கு நிகராகி விடுவான் என யூகிப்பதனால் பொறாமை என பலவிதங்களில் அது ஏற்படுகிறது. அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது அது வஞ்சமாக மாறி அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்த மனம் நினைக்கிறது. வஞ்சம் கொண்ட நெஞ்சத்தில் விரோதமான ஐயங்கள் புற்றிலிருந்து அரவங்களைப்போல் கிளம்புகின்றன.
எங்கோ இருக்கும் யாரோ ஒருவன் தன்னை விட பெரிதாக வளர்ந்து எழுவது எப்போதும் நடந்தவண்ணம் இருந்தாலும் அது ஒருவரை சலனப்படுத்துவதில்லை. ஒரே தெருவில் தூரத்தில் தான் அறியாத ஒருவர் பெரிதாக வீடு கட்டிக்கொண்டால் அதை ஒருவர் பொருட்படுத்துவதில்லை. அதே நேரத்தில் தன் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் அவர் வீட்டை தன் வீட்டை விட அதிக வசதிகொண்டதாக பெரிதாக்கிக்கொள்கையில், அல்லது தம்மிடம் இல்லாத விலை உயர்ந்த வாகனம் போன்ற ஒன்றை அவர்கள் கொள்கையில் அது பெரிதாக மனதை உறுத்துகிறது. அது பொறாமையென மாறி வஞ்சமென மனதில் எழுகிறது. அப்போது அற்ப காரணங்களுக்காக அவர்களுடன் சண்டை பிடிக்க, மற்றவர்களிடம் அவர்களை பழித்துப் பேச ஒருவர் தயங்குவதில்லை. இந்த வஞ்சம் பெருகிப் பெருகி ஒருவரை ஆட்கொண்டு தனக்கு வேறு எவ்வகையிலும் தீங்கு செய்யாத அந்த நபரை தாழ்த்த, தீங்கு செய்ய, இழிவுபடுத்த, அவரைத் தூண்டுகிறது.
நெருங்கிய உறவினருக்கிடையில் இவ்விதம் உருவாகும் வஞ்சத்தை, அது உருவாகும் உளவியலை வெண்முரசு பலவிடங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறது. துரியோதனன் பீமன் மேல் கொள்ளும் வஞ்சம் அப்படி உருவான ஒன்றாகும். இப்போது நளன் கதையை சொல்கையில் அவ்வுளவியல் நிகழ்வை மிக நுட்பமாக விவரிக்கிறது. புஷ்கரன் நளனுக்கு நெருங்கியவன், ஒரு நேரத்தில் நளனுக்காக உயிர் துறப்பேன் எனும் சொல்லும் அளவுக்கு நெருங்கியவனாக இருக்கிறான். ஆனால் புஷ்கரன் மனம் திரிபடைவது படிபடியாக நிகழ்வது இங்கு காட்டப்படுகிறது.
உறவுகளைப் பேண உறவினர்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அன்பும் பாசமும், வெறுப்பும் சினமுமாக மாற ஒரு சிறு புரிதலின்மையே போதுமானதாக ஆகிவிடுகிறது. ஒரு முக்கியமான வேலையில் உறவினரை தவிர்த்தலே பெரும் பிளவை உண்டாக்கக்கூடும். புறக்கணிப்பு என்பதைப்போல் உறவை பாதிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதனால் வீட்டில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு உறவினர்களை வேண்டி அழைத்தலும், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளைத் தருவதும் இன்றும்கூட மரபுகளாக சடங்குகளாக நீடிக்கின்றன.
உறவினரின் மனம் எப்படி சிந்திக்கும் எனகணிப்பது சிக்கலானதாகத் தெரியலாம். ஆனால் அந்த உறவினர் நிலையில் தன்னை வைத்து சிந்தித்துப் பார்த்து ஓரளவு யூகிக்கமுடியும். நளன் இந்த உளவியலை ஓரளவுக்கு அறிந்தவனாக இருக்கிறான். தன்னை புஷ்கரனின் நிலையில் வைத்து சிந்திக்கிறான். தன் திருமண நிகழ்வில் புஷ்கரனுக்கு ஒரு முக்கிய பங்களிக்க நினைக்கிறான் அவ்வாறு அளிக்காவிடில் அவன் என்ன எண்ணுவான என கணிக்கிறான்.
மூத்தவனால் நான் கைவிடப்படுகிறேன் என்றே எண்ணுவேன். ஐயத்திற்குரியவனாகிறேன் என உணர்பவனே முதல் எதிரியாகிறான். அது அவன் ஆண்மையை, நேர்மையை, அவன் கொண்ட அன்பை சிறுமைசெய்வது. உச்சவெறுப்பென்பது புறக்கணிக்கப்பட்ட அன்பின் மாற்றுரு.”
மூத்தவனால் நான் கைவிடப்படுகிறேன் என்றே எண்ணுவேன். ஐயத்திற்குரியவனாகிறேன் என உணர்பவனே முதல் எதிரியாகிறான். அது அவன் ஆண்மையை, நேர்மையை, அவன் கொண்ட அன்பை சிறுமைசெய்வது. உச்சவெறுப்பென்பது புறக்கணிக்கப்பட்ட அன்பின் மாற்றுரு.”
ஆனாலும் புஷ்கரனின் தகுதியின்மை மற்றும் நளன் கொண்டிருக்கும் பெருந்தகுதி இரண்டுக்கும் இருக்கும் வேறுபாட்டினாலேயே விலகல் ஏற்படுவதும் அதை மற்றவர்கள் இன்னும் இன்னும் பெரிதாக்கிவிடுவதையும் கதைப் போக்கில் நிகழ்வதைக் கண்டுவருகிறோம். உறவுகள் மிகக் கவனமாக கையாளவேண்டியதாக இருப்பதை நாம் அறிகிறோம். நமக்கு வேறு வழியில்லை. ஆனாலும் அத்தனை சிக்கல்களுக்குமிடையே மனிதர்கள் உறவுகள் காரணமாக குடும்பமென திரண்டிருப்பதாலேயே உலகின் அனைத்து முன்னேற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிட முடியாது.
உறவுகள் இல்லையெனில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வித பிடிப்புகளுமற்ற வெறும் குழாங்கற்களைப்போல் ஆகி சமூகத்தின் கட்டுமானம் சிதைந்துபோய்விடும். உறவுகளுக்கிடையே பாசமும், நேசமும், உறவின் நலனை தன் நலனெனக் கருதும் குணமும், அங்கீகரித்தலும், விட்டுக்கொடுத்தலும் மற்றும் குறைகளை சகித்துக்கொள்ளுதலுமான ஆன பிணைப்பு இருக்குமானால் அவ்வுறவினில் விரிசல்கள் ஏதும் நிகழாமல் இணைந்தே இருக்கும்.
அப்படி இணைந்து இருக்கும் முக்கியமான இரு உறவுப் பிணைப்புகள் வெண்முரசில் கண்டிருக்கிறோம். துரியோதனனின் தம்பிகள் அனைவரும் கொண்டிருக்கும் உறவின் பிணைப்பு மிக உறுதியானது. அவன் தம்பியர் அனைவரும் தனக்கென வேறுபட்ட சிந்தையை ,ஆளுமையை குணங்களைக்கூட கொள்ளாமல் துரியோதனனை அப்படியே பின்பற்றுகின்றனர். இதில் ஒரே விதிவிலக்காக குண்டாசி சற்று மாறுபட்டு சிந்தித்தாலும் செயலளவில் அந்த பிணைப்பில் இருந்து விடுபடுவதில்லை. அவர்களின் இந்த சகோதர உறவில் எப்போதும் விரிசல் என்பதே வராது என்பது உறுதி.
ஆனால் பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தமக்கென தனியாக ஆளுமையும் குணங்களும் கொண்டவர்கள். பல நேரங்களில் பல கருத்துக்களில் வேறுபடுபவர்களாக இருக்கிறார்கள். அவ்வளவு இருந்தும் அவர்களுக்கிடையே இருக்கும் அளவற்ற நேசம் அவர்கள் உறவில் பிணைத்திருக்கிறது.
ஆம், நெருங்கிய பாறைகள் சுண்னாம்புக் கலவையால் இடைவெளியின்றி இணைத்து கட்டப்பட்டிருக்கும்போது அவற்றினிடையே நச்சுயிர்கள் தங்கி வாழ முடியாது என்பதும் உண்மைதானே
தண்டபாணி துரைவேல்