Wednesday, July 5, 2017

சதகர்ணிகள்:



சதகர்ணிகள் பற்றிய முதல் குறிப்பு வெண்முரசில் கிராதத்தில் வருகிறது, ‘நூறு காதுகளைக் கொண்ட திருவிட பெருமன்னன் இன்னமும் உன்னை நினைத்து ஏங்குகிறான்.’ என. அப்போதே சற்று குழப்பமாகத் தான் இருந்தது. சாதவாகனர்கள் (சதகர்ணிகள் இவர்களின் ஒரு மன்னர் நிரையே) பொ.மு 200 களில் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் முதல் மன்னர் சிமுகா காலத்தில் துவங்கப்பட்டது என்பது தற்கால வரலாறு. இன்றைய பைதான், புனே துவங்கி கிருஷ்ணையின் எல்லை வரை தக்காணமெங்கும் விரிந்து இருந்தது இவர்களின் பேரரசு. ஒரு கட்டத்தில் பாடலிபுத்திரத்தையும் இவர்கள் வென்று இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில் மிகப் புகழ்பெற்ற மன்னன் – கௌதமி புத்திர சதகர்ணி.

ஷத்ரியர்களின் பெருமையையும், பெருமிதத்தையும் உடைத்தவன்; ஷாகாக்களையும் (மேற்கு ஷத்ரபாக்கள்), யவனர்களையும் (இந்தோ-கிரேக்கர்கள்), பஹ்லவர்களையும் (இந்தோ-பார்த்தீனியர்கள்) அழித்தவன்; காகரத குடும்பத்தை வேரோடு கெல்லி எறிந்தவன்; சாதவாகனர்களின் பெருஞ்சிறப்பை மீட்டவன் என இவனைப் பற்றிய நாசிக் பிரஸ்தாபிதம் (nasik prasasti) சொல்கிறது. இதை எழுதுவித்தவர் இவனது தாய் – கௌதமி பாலஸ்ரீ.

முன்பே தமிழர்களின் வரலாறு குறித்த ஈரட்டி உரையாடலிலும், அதன் பிறகான தனி உரையாடல்களிலும் பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் அந்திம காலத்தில் தெற்கு நோக்கி வந்தவர்கள் என்ற சித்திரத்தை அளித்திருகிறார் ஜெ. மேற்கூறிய கியாதி அதை உறுதிப்படுத்துகிறது. மேலும் பல்லவர்களுக்கும், ஈரானியர்களுக்குமான ஒரு தொடர்பையும்  இதன் மூலம் அறியலாம். இதெல்லாம் தொல்லியல் தரவுகள்.

புராணங்கள்:

பொதுவாக ஆந்திர நிலத்தை ஆண்ட மன்னர்களான சாதவாகன மன்னர்களைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் மச்ச புராணம், வாயு புராணம், விஷ்ணு புராணம் போன்றவற்றில் வருகின்றன. இம்மக்களைப் பற்றிய முதல் தொன்மக் கதை ஐதேரேய ஆரண்யகத்தில்  வருகின்றது. சொல்வளர்காட்டில் நாமெல்லாம் நன்கு அறிந்த சுனக்ஷேபரின் கதையின் தொடர்ச்சியே அது. அக்கதையில் விஸ்வாமித்திரர் தனது மூத்த புதல்வனாக சுனக்ஷேபரை அறிவிப்பார். அதை அவரது மகன்களில் ஒரு பாதியே ஏற்றுக் கொள்வர். ஏற்றுக் கொள்ளாத பிறர் ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட கங்கைச் சமவெளி நிலத்திலிருந்து தெற்கு நோக்கி நில விலக்கு செய்யப்பட்டனர். அப்படி வந்தவர்களே ஆந்திரர், புளிந்தர்கள், புண்டரர்கள்.

மகாபாரதம்:

பாரதத்தைப் பொறுத்த வரை ஆந்திரர்கள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சாத்யகியின் கீழிருந்த படைப்பிரிவில் நல்ல ஆகிருதி கொண்ட, கட்டமைந்த உடல் கொண்ட ஆந்திர வீரர்கள் இருந்தார்கள் என ஓர் குறிப்பு உள்ளது. ஆயினும் சாதவாகனர்களைப் பற்றிய குறிப்பு பாரதத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த பின்னணியில் தான் பின்வரும் கேள்வி வருகிறது. மிகத் தெளிவாக சதகர்ணிகள் எனக் கூறப்பட்டுள்ளதற்குப் பின்னால் வேறு ஏதாவது மூகாந்திரம் உள்ளதா? புராணங்களை முன்வைத்து ஊகித்திருக்கலாம் எனவும் படுகிறது. அது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. ஏனென்றால் காலபிராமணத்தின் படி பாகவதம் எல்லாம் பாரத்தத்தின் பிற்காலத்தில் தோன்றியவையே. சம்பவங்கள் அவ்வாறு வருவதில் குழப்பம் இல்லை. ஆனால் ராஜாங்கங்களின் பெயர்கள்?

வரலாற்றுக் காலத்தையும், புராண காலத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றாலும், இந்த மயக்கத்துக்கு கிராதத்தில் இடம் இருந்தது. மாமலரிலும் இதே போன்றொரு மயக்கம் இருந்தது, கசனின் தேவயானி சீதையைப் பற்றி எண்ணுமிடம். இவ்விரு நாவல்களும் ஒரு மாதிரி அகத்தளத்தில் நிகழ்பவை. கறாரான இட, கால தேவைகள் இல்லாதவை. ஆனால், நீர்க்கோலம் அவ்வாறு அல்ல. முக்கியமான விராட பர்வத்தின் கதை. இதில் தான் பாண்டவர்களின் ஏழு அக்ரோணி படைகளின் மூலம் உள்ளது. நிஷாதக் கூட்டமைப்பு அதில் முக்கியமான ஒரு அங்கம். எனவே இதில் தருக்கத்தின், கால அளவுகளின் தேவை இருப்பதாக நினைக்கிறேன். அவ்வகையில் சதகர்ணி என்ற பெயரின் பயன்பாடு சற்று குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. (முற்கால சோழர்கள் போல் முற்கால சதகர்ணிகள் எனக் கொள்ளலாமா!!!)

பல்லவர்கள் என்பது பலருக்கும் புருவம் உயர்த்த வைத்திருக்கக் கூடும். ஆயினும் சதகர்ணி என்பதே என்னளவில் முக்கியமாகப் படுகிறது. ஏனென்றால் சதகர்ணி என்பதை ஏற்றுக் கொள்வோமானால் பல்லவர்களையும், வாகடர்களையும் ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்