வெண்முரசில் வரும்
அரசியல்சூழலைப்பற்றி நாவலுக்கு வெளியே நான் விளக்கம் அளிக்கக்கூடாதென்று நினைக்கிறேன்.
ஏனென்றால் அது நாவலுக்குள் அந்தச்சித்திரத்தை நான் முழுமையாக விளக்கமுடியாமலாக ஆக்கும்.
சொல்லிவிட்டேன் என்னும் நிறைவை அளித்துவிடும்
ஆனால் இப்படி ஒருவிவாதம் எழுந்தமையால் சுருக்கமான ஒரு குறிப்பு. இதை மேலும் விவாதிக்க நான் விரும்பவில்லை.
விவாதித்து அறியும் நண்பர்கள் தங்களுக்குள் அதைச்செய்துகொள்ளலாம்.
இந்நாவலில் நான்
புராணம் – வரலாறு இரண்டுக்கும் நடுவே ஒரு இடத்தில் சித்தரிப்பை நிகழ்த்துகிறேன் என்பதை
நண்பர்கள் காணலாம். உண்மையில் இந்திய வரலாறு என்பது ஹரப்பா நாகரீக காலகட்டம், மகாபாரத-
ராமாயண காலகட்டம் என்னும் இரு காலகட்டங்களுக்கு
பின் பிற்கால மகதப்பேரரசின் காலகட்டத்தில்தான் தொடங்குகிறது.
கிமு 300 வாக்கில்சந்திரகுப்த
மௌரியரின் காலகட்டத்தில்தான் வரலாற்றுக்குரிய புறவய ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதன்பின்னர்
கிடைத்த உதிரி தொல்லியல் சான்றுகளைக்கொண்டு இந்திய வரலாற்றை எழுதுகிறார்கள்.
முந்தைய காலகட்டத்தில்
ஹரப்பன் நாகரீகம் ஏராளமான தொல்லியல் சான்றுகள் கொண்டது, நூலாதாரங்கள் இல்லை. வேத-இதிகாசங்களின்
காலகட்டம் ஏராளமான நூலாதாரங்கள் கொண்டது. தொல்லியல் சான்றுகள் இல்லை. இந்த ‘மாபெரும் அகழி’யை நிரப்பவே இத்தனை கொள்கைகளும் கோட்பாடுகளும்
பேசப்படுகின்றன
ஹரப்பன் நாகரீகம்
வெண்கலக் காலகட்டத்தையது. இதிகாசகாலம் இரும்புக்காலகட்டத்தையது.ஆகவே இதிகாசகாலகட்டம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
அப்போது ஐம்பத்தாறு நாடுகளாக ஆரியவர்த்தம் இருந்தது. புதுநாடுகள் உருவாகிவந்தன. அவற்றுக்குள்
பூசல்கள் இருந்தன. போர்கள் நிகழ்ந்தன. இது இதிகாசம் காட்டும் சித்திரம்
அதன்பின்னர் நீண்ட
ஒரு தாவல். நமக்கு ஓர் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறே கிடைப்பதில்லை.
மகதத்தில் இருந்து
மீண்டும் வரலாற்றை ஆரம்பிக்கிறோம். கிமு 300 வாக்கில்
அதற்கு முன் வரலாறே
இல்லை என்பது இதன் பொருள் அல்ல. அவ்வரலாறு எழுதப்படவில்லை, கிடைக்கவில்லை- அவ்வளவுதான்.
அந்த எழுதப்படாத வரலாற்றை இந்நாவல் மகதகாலகட்டத்திற்குப் பின்னால் கிடைத்த வரலாற்றுச்
செய்திகளைக்கொண்டும் அதற்கு முன்னால் கிடைத்த புராணச்செய்திகளைக்கொண்டும் நிரப்ப முயல்கிறது.
இலக்கியப்புனைவுக்குரிய கற்பனையின் துணையுடன். இப்படி இருந்திருக்கலாம் என்பதே புனைவு
எப்போதும் சொல்வது. இதுவே என்றல்ல. ஊகிப்பதற்கான முகாந்திரம் இருந்தால்போதும்
நமக்கு ஆதாரபூர்வமான புறவய வரலாறு தொடங்கும்போது வடக்கே
மகதம் இருந்தது. நடு இந்தியாவில் சதகர்ணிகள் இருந்தனர். இவர்கள் குறித்த செய்திகள் அப்போதுதான்
கிடைக்கின்றன என்பதனால் இவர்கள் அப்போதுதான் உருவானார்கள் என்று பொருள் இல்லை. மகதம்
அதற்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததை தொல்கதைகள் சொல்கின்றன. அதேபோல சதகர்ணிகளும்
இருந்தனர் என்று புராணக்கதைகள் சொல்கின்றன.
அக்காலகட்டத்தில்
அரசியல்பரிணாமங்கள் மிகமிக மெல்லவே நடந்தன. பேரரசுகள் பல நூறாண்டுகளாக திரண்டுவந்தன.
ஆகவே மகாபாரதக் காலகட்டத்திலேயே சதகர்ணிகள் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அதையே
வெண்முரசு சொல்கிறது. சோழர்களும் சேரர்களும் பாண்டியர்களும் இருந்திருக்கலாம் என்றால்
சதகர்ணிகளும் இருந்திருக்கக் கூடாதா என்ன?
நமக்கு ஸ்ரீமுகன்
அல்லது சிமுகனின் முதல் கல்வெட்டாதாரம் கிடைக்கையிலேயே அவன் பேரரசன். மிகப்பெரும் நிலப்பகுதியை
ஆண்டவன். அந்நிலப்பகுதி முழுக்க பரவி ஒரு பேரரசு உருவாக அன்றைய அரசியல்சூழலில் ஆயிரமாண்டுகாலமாவது
ஆகும்.
வெண்முரசில் இத்தகைய
பேரரசுகள் உருவாவதற்கான ஒரு பரிணாமமுறை சொல்லப்படுகிறது. குலங்களின் கூட்டமைப்புகள்
மெல்ல பேரரசுகள் ஆகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு பூசல்களுடன் குலக்கூட்டமைப்புகள்
உருவாவதை வெண்முரசு காட்டுகிறது.
இதற்குள்ளகவே பால்ஹிகக்
கூட்டமைப்பு உருவாவதை, வங்கக்கூட்டமைப்பு உருவாகிவிட்டிருப்பதை வெண்முரசில் காணலாம்.
குலசேகரன் என்பதே அன்றைய அரசர்களின் பட்டம்.
சதகர்ணி
என்றால் நூறு காதுகள் கொண்டவன் என பொருள். அது ஒரு மாபெரும் குலத்தொகுதி. அதில் அடங்கிய
உபகுலங்களே பின்னர் சதகர்ணிகளின் வீழ்ச்சிக்குப்பின் தனியரசுகள் ஆயின. வாகாடர்கள்,
பல்லவர்கள், சாளுக்கியர்கள் அனைவரும் சதகர்ணிகளின் உட்குலங்களே. ஆகவே அவையும் மகாபாரதக்
காலத்தில் இருந்திருக்கலாம்
நம் சிக்கல் என்னவென்றால்
எப்போது தொல்லியல் ஆதாரம் கிடைக்கிறதோ அப்போது இவர்களின் வரலாறும் தொடங்குகிறது என
நினைத்துக்கொள்வதுதான். அப்படியென்றால் மகதத்தின் வரலாற்றை மிகமிகப்பிந்தி, மகாபாரதக்
காலம் முடிந்து ஆயிரமாண்டுக்காலம் கடந்துதான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும்.
வெண்முரசு வரலாற்றுத்தகவல்கள்
அனைத்தையும் ஒன்றுவிடாமல் பரிசீலித்தபின்னரே எழுதப்படுகிறது. ஒருநாளில் ஐந்துமணிநேரமாவது
அதற்காகச் செலவிடுகிறேன். நமக்கு தொல்லியல்செய்திகள் கிடைக்கும் காலகட்டத்திற்கும்
முன்னால் ஏன்ன நிகழ்ந்தது என்பதே வெண்முரசின் கேள்வி. ஒன்றுமே நிகழவில்லை, அப்போது
வரலாறே இல்லை என்று வரலாற்றாசிரியர் சொல்லமாட்டார். அவர்களைப்பொறுத்தவரை அது அறியப்படாத
காலகட்டம். அக்காலகட்டத்தை அறியப்பட்ட காலத்தை கற்பனையால் பின்னுக்குக் கொண்டுசென்று
புனைகிறது இந்நாவல்
இது அன்றைய இந்திய
அரசியல்வரலாற்றை மிகப்பெரிய ஒரு பரப்பாக புராணங்களை ஒரு சரடாகவும் வரலாற்றை மறுசரடாகவும்
கொண்டு புனைகிறது என்பதை வாசகர் உணரலாம்
ஜெ