ஜெ,
மிகப்பெரிய மனநெருக்கடியை
மனிதர்கள் எப்படியெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதற்கு இன்றைய அத்தியாயம் ஒரு அற்புதமான
விளக்கம். ஒரு கதைச்சந்தர்ப்பத்தை இந்த அளவுக்கு டீடெயிலாகக் கொண்டுசெல்லமுடியுமா என்பதே
ஆச்சரியமாக உள்ளது. என் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தபோது இதையெல்லாம் அனுபவித்தோம்.
ஒருபக்கம் அவருக்கு கான்ஸர். மறுபக்கம் அவருடைய பிஸினஸ் வீழ்ச்சியடைந்தது. கையில் ஒரு
பைசா இல்லை. அதோடு வேறு பல பிரச்சினைகள். நான்கே வாரத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்.
ஆனால் ஓர் எல்லையில் அப்படியே ரிலீவ் ஆகிவிட்டோம். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
ஆஸ்பத்திரியின் வெளியே பெஞ்சில் நானும் அம்மாவும் தனித்தனியாகத் தூங்கினோம். விழித்ததும்
அம்மா எல்லாம் பெருமாள் விட்டவழி என்று சொன்னார். அதோடு மனம் அமைதி அடைந்தது. நாங்கள்
சென்று ஒரு காபி சாப்பிட்டோம். திரும்பும் வழியில் சுப்ரமணியபுரம் சினிமாவைப்பற்றி
ஜாலியாகப் பேசிக்கொண்டே வந்தோம். அந்த தெளிவு கடவுள் அளித்தது என்று அம்மா இப்போதும்
சொல்வாள். இந்தக்கதையை அம்மாவிடம் சொன்னேன். அதையே சொன்னாள். ஆனால் பெருமாள் நித்ராதேவியாக
வந்திருக்கிறார் எனறு இப்போது புரிந்துகொண்டேன்
ரங்கா