இதுவரையிலும் வெண்முரசு தொடர் நாவல் வரிசையில் சாகச நாவல் என ஒன்று வந்ததில்லை. பீமனுக்கு அவ்வாறான ஒரு நாவல் வருமென்று தான் நினைத்திருந்தேன். ஏனென்றால் செவ்வியல் என்பதில் சாகசமும் ஓர் அங்கம் தான் என ஜெ பல முறை சொல்லி இருக்கிறார். இருப்பினும் வெண்முரசில் அது இதுவரை சாத்தியப்படவில்லை. சாகசம் என்பது உயிரைத் துச்சமென மதித்து மீமானுட செயல்களைப் புரிவது எனக் கொண்டால் காண்டீபமும், கிராதமும் அவ்வகைப் பட்டவையே. ஆயினும் அவை ஒரு மானுடனின் பயணங்களின் தொகை. அதில் அறிதல் என்பது ஒரு இணைப் பயணம். சாகசம் என்பது உடல் மற்றும் மனதின் உச்சகட்ட செயல்திறன்களின் வெறும் செயல்களின் தொகை என்ற வகையிலேயே, மானுட சாத்தியத்தின் எல்லையை ஒரு சொல்லேனும் நகர்த்தக் கூடியது எனக் கொண்டால் அத்தகைய நாவல் இன்னும் வரவில்லை, எழுதழலுக்கு முன்பு வரை.
அபிமன்யுவை வைத்து இப்படி ஒரு சாகசம், அட்டகாசம். போரை பல முறையில் விவரித்திருக்கிறது வெண்முரசு. பெரும்பாலும் அதன் பொருளின்மை இறுதியில் நம்மை வந்து அறையும் வகையிலேயே அவை அமைந்திருக்கின்றன. அத்தகைய நோக்குகளுக்கு முதன்மை அளிக்காமல் மேலும் மேலும் சிக்கலான சமயங்களில், வெற்றி ஒன்றே குறிக்கோள் என முன்னேறிப் பாயும் இளைஞனாக அபிமன்யுவின் போர்கள் அபாரம். அதன் உச்சம் இன்றைய அத்தியாயம். ஒரு நல்ல சாகசக் காட்சி பார்வையாளனையும் அதே உற்சாகத்தில் மேலும் செயலூக்கம் கொள்ள வைக்கும். பல முறை இதை சண்டைக் காட்சிகளை கண் முன் நிகழ்த்திக் காட்டும் தீம் பார்க்குகளில் இதை உணர்ந்திருக்கிறேன். அத்தகைய ஓர் உணர்வை தந்தது இன்றைய அத்தியாயம்.
இதன் முக்கியமான சிறப்பே தனி அலகாக அபிமன்யுவின் சாகசத்தைச் சொல்கையிலே, போர் என்பது எண்ணிக்கையாலும், படையாலும் நிகழ்த்தப்படுவது என்பதை அந்த சூழ்கைகளைக் கொண்டு விவரித்தமையே. அதுவும் அந்த முதலை வாலின் அறைதல் மட்டும் பிளவுண்ட மரத்தின் இடையில் சிக்கிய முதலை வாய் போன்றவை போரை கண் முன் நிகழ்த்தும் மாயத்தைச் செய்தன. ஒரே சமயத்தில் தொகை அலகையும், தனி அலகையும் விவரித்தமையில் இருக்கிறது ஜெ வின் எழுத்து வன்மை.
அருணாச்சலம் மகராஜன்