Sunday, October 29, 2017

ஒருமித்தல்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

எழுதழல் - 44.  ஒருமித்தல் வாய்த்தால் ஓர்த்துள்ளம் உள்ளது உணர பெரும்பாடு ஒன்றில்லை கடும்தவம் ஒன்றில்லை.  கண்ணன் தன் வாழ்வில் ஈட்டிய உச்ச செல்வத்தை, ஒப்பிலா பேரருளை, கணம் தோறும் சுவைக்கும் சுவையை வழங்குகிறான்.  அவன் பிழிந்து அருந்திய கருப்பின் சாற்றை வழங்குகிறான்.  அச்சுவையினும் குவியும் இச்சக்கை பெரிது எனக் கருதும் குருதி வழி பொருள், பதவி, புகழ் என பூசலை தொடரலாம்.  மெய்யுணர்வு எய்தியோர்க்கு குருதி வழி என ஆகாத்திருத்தல் நலம்.  அவ்வாறு அமைந்து விட்டால் குருதி வழி என தம்மை கருத்தாது மறந்திருத்தல் வரம்.

தனக்கென்று உள்ளம் ஒன்றில்லாதது எத்தனை பெரும் பேறு? சிவராத்திரியில் கூறப்பட்ட கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.  சப்த ரிஷிகளுக்கு தினமும் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தார் ஆதியோகி அது கண்ட அன்னை பின்னர் அவ்வண்ணலிடம் கேட்டாள் "அவர்களுக்கு மட்டும் ஏதோ கற்றுத்தந்து கொண்டே இருக்கிறீர்கள். எனக்கு ஏதும் கற்பித்தல் இல்லையே?" என்று.  "அது உனக்குத் தேவையில்லை" என்ற அண்ணல் "வா என் மடி அமர்" என அழைத்து அமர்த்தி அர்த்தநாரி என்று ஆனார்.

தான் உணர்ந்த சுவை பிறரும் உணர கற்றுக்கொடுப்பதெல்லாம் உள்ளம் களைவது எவ்வாறு என்றுதான்.  ஏற்கனவே அன்பு ஒன்றினாலேயே உள்ளம் களைந்து விட்டவர்க்கு வேதமும் வகுப்பும் வேண்டியதில்லை, இக்கணமே பெருக என்று அளிப்பான் போலும் அண்ணல்.

அபிமன்யுவும் பிரலம்பனும் தம்முள் ஒருவரோடு அன்புடையோர், யாவற்றோடும் ஒன்றுபட்ட கண்ணன் மீது அன்புடையோர் கண்ணன் பால் அன்புற்றோர் அனைவர் மீதும் அன்புடையோர்.  இடம், தொழில், வேற்றுமை, ஊழ், அது விளக்கும் பலன் என யாவும் கடந்து அவர்களிடையே அன்பினால் இடையறாது இலங்குகிறது போலும் ஒரு சத்சங்கம்.     


அன்புடன் 
விக்ரம்
கோவை