குழந்தை பிறந்ததும் அதைப்பார்கின்றவர்கள். அப்பாவின் குடும்பத்தவர்கள் என்றால் அப்பாவைப்போல என்பார்கள். அம்மாவின் குடும்பத்தவர்கள் என்றால் அம்மாவைப்போல என்பார்கள் ஆனால் குழந்தை எங்கோ ஒரு மையத்தில் மாமனைப்போல இருக்கும். ஆனால் அதை யாரும் பெரிதாக சொல்வதில்லை ஆனால் குழந்தை அதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும். இந்த அற்புதத்தைதான் தனது திருப்புகழில் எம்பெருமான் முருகனை அருணகிரி சுவாமிகள் புகழும்போது எல்லாம் “அரிமருகன் நீ“ என்று வியந்து வியந்து ஓதி மகிழ்கின்றார்.
முருகன புகழ்கின்றாரா அல்லது அரியை புகழ்கின்றாரா என்ற இன்பகோபம் வரும் வரை விடுவதில்லை நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தாலும், அன்னை அணைப்பால் ஆறுமுகம் ஆனாலும் முருகன் நாராயணன் வடிவாகவே காண்போர் கண்களுக்கு விளங்குகின்றான். தீராத விளையாட்டுப்பிள்ளையாய் விளையாடுவதில் ஆகட்டும், பறக்கும் பரி ஊர்வதில் ஆகட்டும், படைநடத்துவதில் ஆகட்டும், இருமாதோடு இன்பம் துய்ப்பதில் ஆகட்டும். ஞானியரை உருவாக்கும் நேயத்தில் ஆகட்டும் முருகன் மாமனைப்போன்றவன். .இது ஒரு மரபியல் மாண்பு.
வெண்முரசில் கண்ணனைப்போல மருகன் அபிமன்யு என்பது எத்தனை விதமாக விவரிக்கப்படுகின்றது. அவன் அர்ஜுனன் மகன்தான், சுபத்திரையின் புத்திரன்தான் ஆனால் அவன் கண்ணனின் மருகன். அவனை அஸ்தினபுரியில் கா’ணும் துரியோதனன் தாயின் வழியாக இளைய யாதவரின் கண்களைப்பெற்று உள்ளான் என்று புகழ்கின்றான்.. அவனை காணும் சகாதேவன் . இளைய யாதவரின் புன்னகையை சூடுடி உள்ளான் என்று சரியாக மெச்சி சொல்கின்றான். கண்ணில்லாத திருதராஸ்டிரன் அறிவும் அறியாமையும் ஒன்றாக கொண்ட உள்ளத்துடன் பேசுகின்றான் என்பது. குந்தியை பேரழகி என்று கொஞ்சியவன் இளைய யாதவன் அதையே இன்று அபிமன்’யு செய்கின்றான். அர்ஜுனன் அபிமன்யு மீது கோபம் கொள்வது தன்போலவே இவனும் பெண்களை நேசிக்கின்றான் என்பதால் அல்ல இளையயாதவன்போலவே பெண்களை களியாக்கி மயக்குகின்றான் என்பதால். எங்கும் எப்படியும் அபிமன்யு இளைய யாதவனாகவே நடிக்கின்றான் என்பதால். இதுதான் அபிமன்யுவை வரையும் வெண்முரசின் அற்புதம். அபிமன்யுவின் வழியாக நாம் பார்த்து பார்ததுச் செல்வது இளைய யாதவன் கண்ணனையே.
இளைய யாதவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் தனது அற்புதத்தை உள்ளுக்குள் நிறைத்து அவர்களை தன்னை நீங்காமல் நினைக்கவைக்கிறான். இளைய யாதவன் அர்ஜுனனை பெண்ணாக்கி உள்ளம் உருகவைக்கிறான் என்றால் அபிமன்யுவை மீண்டும் மீண்டும் குழந்தையாக்கி அதே மனநிலையில் வைத்து களியாட்டு சிறுவனாக்கி மகிழவைக்கிறான். ஏதே ஒரு விதத்தில் கண்ணன் எங்கும் யாருக்கும் எப்போதும் குழந்தைதான் அது அவனை அன்னையர்பால் நீங்க இடத்தில் நிலைபெற வைக்கின்றது அது அபிமன்யுவுக்கு பிடிக்கின்றது. அர்ஜுனனை காதலித்தாலும் கண்ணனை நேசிப்பதில் சுபத்தி்ரை அளவற்ற ஆழம் காணமுடியாத உள்ளம் படைத்தவள் அவள் உள்ளம்தான் அபிமன்யுவை கண்ணனாக ஆக்கி மடியிருத்தி மகிழ்கின்றது.
எழுதழல்-25ம்பகுதியில் போரை வெறுக்கம் தருமனும் இளைய யாதவன் தேடும் மெய்மைக்காக பாரதமே அழியும் போர் வரும் என்றாலும் ஏற்பேன் என்கிறான். இதைக்கேட்டு குந்தி பதைக்கிறாள். திரௌபதி ஊழ்கசிலையென அமைகின்றாள். துருபதர் சிலகணங்கள் அசைவிழந்து பீடத்தில் சாந்து பின்பு சொல்லெடுக்கிறான் அப்போது உளம் விம்மியெழ அபிமன்யூ இதழ்களை இறுக்கி விம்மலை வென்றான்.என்று ஜெ அத்தியாயத்தை முடிகின்றார்.
தன்னையே தனது நாயகனாக நடிக்கும் ஒருவனின் உள்ளம் படும்பாடுதான் அபிமன்யுவாகி இங்கு கண்ணனாக நடித்துக்காட்டப்படுகி்றது. இதைத்தான் தனது உள்ளத்தில் அர்ஜுனன் கண்டு தனது உள்ளம் அலைகழிக்கப்படுவதை தனது மைத்துனன் திருஷ்டதூமனிடம் சொல்கின்றான். காரணம் இவனும் இளைய யாதவன்போல உங்களிள் ஒருவன் என்று நம்ப வைக்கிறான் ஆனால் நான் உங்களில் ஒருவன் அல்ல என்பதை கண்ணன்போலவே இவனும் அறிந்தும் இருக்கிறான் என்கிறான்.
“இவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏற்படும் ஒவ்வாமை ஏன் என்று என் அகம் எப்போதுமே அலைக்கழிகிறது. மைத்துனரே, இவனிடம் மிகப் பிழையாக ஒன்றுள்ளது. இந்த குழந்தைத்தன்மை இவன் பயின்று தேர்ந்திருக்கும் நடிப்பு. இந்திரப்பிரஸ்தத்தில் இவன் ஏவலரிடமும் சூதரிடமும் களியாடுவதை பார்த்திருக்கிறேன். தங்களில் ஒருவர் என இவனை அவர்கள் நம்பச் செய்கிறான். ஆனால் இவன் அவர்களில் ஒருவன் அல்ல. அதை இவன் மிக நன்றாகவே அறிவான்.” நமக்கு இது முதிரா இளையன் ஆடலாக வெளிப்படுகின்றது. தந்தையாகிய அர்ஜுனனுக்கு அது ஒரு இதய அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
வாழ்க்கை எப்போதும் விசித்திரம் நிரம்பியதுதான். பாணசுரன் எதிரில் இறப்பின் முன் நிற்கும் அபிமன்யுவை காக்க கண்ணன் பொன்னாழி எழுந்து வருகின்றது. முகில் கிழித்துவரும் கதிரோன்போல கண்ணன் அபிமன்யுவுக்கு காட்சித்தருகின்றான். ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று அவன் வாழ்வில் நடக்கும் அதே பொன்னாழி ஒருநாள் அவனுக்காக கதிரோனை மறைக்கும்.
காலமே நீ முரண்களை எழுதிய பின்பு நடிக்கின்றாயா அல்லது நீ நடிப்பது காலத்தில் முரண்நகையாக அமைந்து வாழ்க்கையை கவியாக்குகின்றதா?
அபிமன்யு முன்பு தோன்றும் கண்ணனின் தரிசனம் அற்புத தருணம். ஜெ தன்னை மீறியே வெண்முரசு எழுதுகின்றார். நன்றி ஜெ.
போர்முகப்பில் கருமுகில்களை கி ழித்து எழும் காலைக் கதிரவனென இ ளைய யாதவர் தோன்றினார்” என அபி மன்யூ சொல்லி முடித்தான்
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் பரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.-பேயாழ்வார்.
கண்ணன் யாருக்கு தரிசனம் கொடுத்தாலும் அவர்களை ஆழ்வார்கள் ஆக்கும் நோக்குடனேயே கொடுப்பான் போலும் அல்லது இவர்கள் ஆழ்வார்கள் என்று அறியாதவர்கள் என்று அறிந்து தரிசனம் கொடுப்பான்போலும்.
நடிக்கிறான் என்கிறோம் ஆனால் நடிப்பவன்தான் மூலத்தை முழுதும் உணரவைக்கிறான். அபிமன்யு கண்ணனுக்காக கண்ணனாக நடிக்கிறான்.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.