பெருமதிப்பிற்குரிய ஜெமோ, அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசில் பெரும்பாலும் தூயதமிழ் சொற்களை யே கையாளுகிறீர்கள்.வடமொழி சொற்களுக்கும்,ஏன் வடமொழிச்சொற்கள் இவையென்று தெரியாமலேயே வழக்கத்தில் புழங்கிக்கொண்டிருக்கும் சொற்களுக்கும் மற்றும் கொச்சையான தமிழ்ச்சொற்களுக்கும் மாற்றாக இனிய தமிழ் சொற்களை கண்டறிந்தும்,புதிதாக புனைந்து ம் பொருத்தமாக வழங்குகிறீர்கள்.அந் தவகையில் முன்கோபத்தை குறிக்கும் சொல்லாக "முந்துசினம்" என்றும்,இந்த அத்தியாயத்தில் 'வெட்டியான்' என்ற சொல்லுக்கு மாற்றாக "சிதைப்பேணுநர்" என்று அழகிய மாற்றுச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள்!.
'வெட்டியான்' என்ற சொல்லுக்கான பொருளை 'கூகுளில்' தேடியபோது இந்த தகவல் கிடைத்தது....
வெட்டியான்: உறவினர் அனைவரும் தங்கள் பற்றை உடல் அளவில் துறந்து உறவை வெட்டிவிடும் வேளையில் பிணத்துக்கும் தனக்கும் இடையே வெட்ட முடியாத பணிப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்பவன்தான் வெட்டியான். பிணம் எரிவதற்கான குறுகிய நேரம்தான் இவனது பணிக்காலம் என்றாலும் இப்பணியின் பொழுது இவன் சற்றும் விலகிவர முடியாது.
வெட்டு, வெட்டி என்ற வேர்ச் சொற்களிலிருந்து பிறந்தது வெட்டியான் என்ற சொல். ‘வெட்டி என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு’ (ந.சி. கந்தையாப்பிள்ளை. செந்தமிழ் அகராதி. 1957) எனப்பல அகராதிகளும் பொருள் தருகின்றன. இதிலிருந்து பிறந்த வெட்டியான் என்பதற்கு ‘கிராம ஊழியர், பிணம் எரிப்பவர்’ எனப் பொருள் அறியப்படுகின்றது.
உடம்பினின்று உயிர் பிரிந்து விட்டால் இவ்வுடம்பால் யாதொரு பயனுமில்லை. எனவே வெட்டியான அல்லது வீணான உடல் என்றாகி விடுகின்றது. இவ்வாறாகிவிட்ட உடலைப் பொறுமையுடன் பொறுப்புணர்வுடன் போதிய நேரம் எடுத்துக் கொண்டு எரிக்கின்றதால் தான், இத்தொழில் புரிவோனுக்கு ‘வெட்டியான்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது போலும். எனவே இத்தொழிலை வெட்டித்தொழில் அதாவது அழிந்த ஒன்றை மேலும் அழிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் வெட்டி முயற்சி எனக் கூறலாம்.
வெட்டியான்: ‘விருஷ்டி’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி’ என்ற சொல் வந்திருக்கும். வீணான-பயனற்ற வேலை செய்பவர்களை இன்று கூட ‘வெட்டி வேலை செய்பவர்’ என்றுதான் சொல்கிறோம்.
அன்புடன்,
அ .சேஷகிரி.