Wednesday, November 15, 2017

சர்வதன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சர்வதன் - பீமனைப் போன்றவன்.  உணவை மிக விருப்புபவன்.  உடல் வலிமை மிக்கவன்.  அவன் யானையே தான்.  மனதில் தோன்றுபவை மறைக்காதவன்.  யௌதேயனுக்கு அவ்வப்போது எரிச்சல் தோன்றக் காரணமாக இருப்பவன்.  யௌதேயனிடமும் சாம்பனிடமும் அவன் பேசுவது அவனது இயல்பை விளக்குகிறது.  ஊழ் பெருவிசை கொள்ளும் போது அதற்கு எதிரான தந்திரங்களும் முந்துதலும் பெரும் சாமர்த்தியம் எனக் காண்பவன் அல்ல அவன்.  அவனுள் ஒரு அசையாமை இருக்கிறது.  நீர்வழிப் படூஉம் புணை எனச் செல்வது வாழ்வு என்று செயல்களின் எல்லை பற்றி விழிப்புடையவன், எனினும் தன் முழு விசையுடன் செயல் புரிபவன்.  அவ்வகையில் மற்றவரைப் பற்றும் கவலைகளின் தீ அவனைப் பற்றுவது இல்லை.  ஒருவேளை காட்டுத் தீயில் கருகும் யானை என்று ஆனாலும் புத்தன் என்று மற்றொரு பிறவி கொள்வான்.  கண்ணனை சரணுரல் பலரது வழி. ஊழை உணர்ந்து மனதைப் பிரித்துக்கொள்ளல் அவனது வழி.  அவன் வைணவன் அல்ல, ஆனால் விவேகம் உடையவன்.  அவனது வலிமை அகந்தைக்கு வழி ஆவது அன்று -அது ஊழின் வழி வந்து இயற்கையின் போக்கில் அமைந்தது.  மத்தகம் நினைவுக்கு வருகிறது.  யானை மலையின் குழந்தை, அவ்வாறே அவனும் இயற்கையின் வலிமையின் ஒரு வெளிப்பாடே.  ஊழிற் பெருவலி யாவுள?.  அவ்வாறாயின் மனிதனின் பெருமுயற்சிகள் பயன் அற்றவையா? அப்படி ஒன்றும் இல்லை.  நமக்கு எது சுவாரசியமோ அதை பிரம்மம் ஒருபோதும் தடை செய்வது இல்லை.  பாதி வழி ஓடி வந்த ஆற்றின் நீர் கூறலாம் "நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.  பாருங்கள் நான் விருப்பட்ட வழியிலேயே சென்று கொண்டு இருக்கிறேன்.  இப்போது கூட இடது பக்கம் வளையப் போகிறேன்" என்று.  ஆனால் இதுவரை கடந்து வந்த பாதையும் இனி போக வேண்டிய வழியும் அவற்றின் விசையும் ஏற்கனவே மேடு பள்ளங்களாலும் புவி ஈர்ப்பு விசையாலும் தீர்மானித்து வகுக்கப்பட்டு இருக்கிறது.  வகுக்கப்பட்ட பாதையை மீறி மேடேற வேண்டுமெனில் தோற்றுவித்த விசும்பே தன் கருணை முகில்கள் கொண்டு பெருமழையும் பெருவிசையும் தந்து எல்லைகளை உடைக்க வேண்டும் என்று ஒன்று மௌனமாக புன்முறுவல் பூத்தவாறு இருக்கிறது. 

சாம்பன் தன் தந்தையின் பால் அன்பு மிக்கவன் அல்ல.  மாறாக சர்வதனும் உபபாண்டவர் அனைவருமே தம் தந்தையர் மீது அன்பும் பெரும் மதிப்பும் கொண்டோர்.         

“யோகி என்றும் ஞானி என்றும் இறைவடிவன் என்றும் மண்ணில் எவருமில்லை” - இது கண்ணனை மனதில் வைத்து சர்வதன் சாம்பனிடம் கூறுவது என்று எண்ணுகிறேன்.  மேலும் "பிரம்மவடிவமான ஊழ்" - இது வேறுவகை சமயக் கொள்கை அல்லது வேறு ஒரு வழி என்று தோன்றுகிறது.   


அன்புடன்
விக்ரம்
கோவை