Saturday, November 18, 2017

ஆயிரம்



அன்புள்ள ஜெ,

மாமலர் செம்பதிப்பு, கூரியரில் அனுப்பப்பட்டு விட்டதாக நேற்று (15-Nov) காலை பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. மாலையில் வீடு திரும்பும்போதே புத்தகம் வந்திருந்தது. சென்னையில் வசிப்பதன் அனுகூலம். செம்பதிப்பை முன்பதிவு செய்த பிறகு, பதிப்பகத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்பி ஆசிரியரின் கையெழுத்து வேண்டுமா, எனில் என்ன பெயருக்கு என்று சிரத்தையாக விசாரித்திருந்தார்கள். புத்தகத்தைப் பிரித்து, என் பெயரை குறிப்பிட்டு நீங்கள் போட்டிருந்த கையெழுத்தைப் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சி. நன்றி!

இம்முறை, அழகிய அட்டைப்படத்தைத் தவிர வேறு படங்கள் இல்லை. பேருருவனைப்பற்றிய வாசகர்களின் மனச்சித்திரங்களைக் குறுக்க வேண்டாம் என்பதனால் இருக்கலாம். அட்டையைப் பார்த்தவுடன் மாமலர் என்பதை மாமல்லர் என்றே படித்தேன். பொருத்தம்தானே?

கூரியர் பார்சலில் மாமலரோடு அலமாரி என்ற புத்தக விமர்சன மாத இதழும் இருந்தது. அதில் "கடல் தாண்டிய கதாநாயகன்" என்ற முனைவர் கு. ஞானசம்பந்தனுடைய நூலுக்கு "ராம தூதனாக கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றவர் அனுமார். சிரஞ்சீவி வரம் பெற்றவர். ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலும் இடம் பெற்ற ஒரே கதாபாத்திரம்" என்ற குறிப்பு வெளியாகியிருந்தது. சிரஞ்சீவியான அவர் மாமலரிலும் முண்டனாக பீமனுக்குத் தரிசனம் தருகிறார். உங்கள் சொற்களின் வழியாக வாசகர்களுக்கும்.

மாமலர் இணையத்தில் வெளியானபோது, ஒவ்வொரு நாளும் கதை கேட்கும் சிறுவர்களுக்கான உற்சாகத்துடன் படித்து வந்தேன். பீமனின் மாமலர் தேடும் பயணம் அவருக்கும் அவரது முன்னோர்களுக்கும் இடையேயான கனவு விழிப்பு விளையாட்டாக முண்டனால் அவருக்கே உரிய சேட்டைகளுடன் நடத்திச் செல்லப்படுகிறது. சந்திரனில் ஆரம்பித்து புரு வரையிலான பீமனின் முன்னோர்களின் வாழ்வு சுவாரசியமாக விரிகிறது.

மாமலரில், வெண்முரசு வாசகர்களுக்கு ஒரு கொண்டாட்டத் தருணம் உள்ளது. மாமலரோடு வெண்முரசு ஆயிரம் அத்தியாயங்களைக் கடந்து செல்கிறது. மாமலரின் வேர்விளையாடல் என்ற 89ஆவது அத்தியாயம், வெண்முரசின் ஆயிரமாவது அத்தியாயம். வாசித்துக் கொண்டாடுவோம். நன்றி!

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை