Tuesday, November 21, 2017

பலராமரின் வருகை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

எழுதழல்-63.  கணிகரின் சூழ்ச்சிகளை, அவரது திறத்தை எதிர்கொள்ளத்தக்க திறம் உடையவர் இளைய யாதவர் மட்டுமே.  பலராமரை தங்கள் தரப்புக்கு இழுக்க யௌதேயன் விளையாட்டைத் தொடங்க, ஆடலை தனதாக்கி வெல்கிறார் கணிகர்.  பலராமரை நன்கு புரிந்தவர்.  மகளின் விருப்பத்துக்கு மாறுபடக் கூடியவர் அல்ல துரியோதனர்.  மண தன்னேற்பு என்று அறிவித்து பலராமரை ஆவேசம் கொள்ளச்செய்து உணர்ச்சிகரமான ஒரு நாடகம் நிகழச் செய்து அவரை கௌரவர் தரப்புக்கு உறுதி கொள்ளச் செய்கிறார்.  யௌதேயனின் கணக்குகள் இரண்டு பக்கமும் முறியடிக்கப்படுகின்றன.  பலராமரை நெகிழ்ச்சி கொள்ளச் செய்து யாதவர் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் அதேசமயம் சாம்பனையும் சர்வதனையும் கைது செய்து யாதவர்கள் தம்மை விஞ்சி விட முடியாது என்றும் துரியோதனர் ஆசிரியரிடம் பேரன்புடன் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் என்றும் காட்டி ஷத்ரியரின் ஆதரவை இழக்காமலும் களத்தை அமைக்கிறார்.  ஒருவகையில் பலராமரை தானம் பெறுபவர் ஆக்கி வெல்லற்கரிய வலிமையும் வள்ளன்மை கொண்ட தலைமையும் கொண்டது அஸ்தினபுரி என்று ஷத்ரியரியரிடையே புகழே தோன்றச் செய்கிறார் என்ற எண்ணம் எழுகிறது.  

இனி யாவும் உணர்ந்த கண்ணனின் விளையாட்டு காண வேண்டும்.  அவன் திருவுளம் என்னவோ?.  பெரும் களத்துள் சிறுகளம் போலும் யௌதெயனின் காய் நகர்த்தலை துரியோதனருக்கு சாதகமாக திருப்புவது போல ஒட்டுமொத்த விளையாட்டையும் தன் நகர்த்தல்களின் மூலம் கண்ணனுக்கு சாதகமாக திருப்புவார் போலும்.  அவ்வாறாயின் கணிகரும் ஞானியே.  மற்றவர்கள் அக்காலத்தின் குறுகிய பரப்புக்குள் மண்ணில் நின்று ஆடுகிறார்கள்.  கண்ணனும் கணிகரும் காலத்தின் பெரும் பரப்பில், யுகங்களின் முகடுகளில் நின்று விண்ணில் தாவி ஆடுகிறார்கள்.


அன்புடன்
விக்ரம்
கோவை