Thursday, November 16, 2017

சாம்பனும் கண்ணனும்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சாம்பன் தன்னுள் இளைய யதாவர் எழுதும் தருணம் என சிறுமைகள் கடந்து வீறு கொள்வது எதிர்பார்த்திராததாக இருந்தது.  ப்ரத்யும்னனும் சாம்பனும் மட்டுமே உபயாதவர்களில் போர் புரியக் கூடியவர்கள் என்றாலும் சர்வதனின் முன்பு சாம்பன் தாழ்வுணர்ச்சி கொள்கிறான்.  தன்னை திறன் அற்றவன் என்று உணர்கிறான்.  தக்க சூழ்நிலையில் தன் எண்ணங்களை மீறி வெளிப்படும் திறன் கொண்டு இளைய யாதவரின் நினைவு கொள்கிறான்.  மிகுந்த சுவாரசியம் கொண்டது இந்த அத்தியாயம் என்றால் அடுத்த அத்தியாயம் (எழுதழல் 60) மேலும் சுவை கொள்கிறது.  சாகசங்களின் தொடர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்க பலராமர் - யௌதேவன் உரையாடல்.  வில் திறன் சாகசத்தைப் போல தன் சொல் திறன் சாகசம் காட்டுகிறான் யௌதேவன்.  உபபாண்டவர் அனைவருமே தங்கள் தந்தையர் திறத்தின் கூர்முனை போன்றவர்கள், அதேசமயம் தங்கள் ஊழ் பற்றி, வரும் காலம் பற்றி உள்ளுணர்வு கொண்டு அதன் காரணமாகவே ஒரு சமநிலை கொண்டவர்கள்.

"சொல்லில் ஒரு புனைவு இருந்தே தீரும். ஏனென்றால் சொல் என்பது புறவயமானது. ஆகவே வகுத்துரைக்கப்பட்ட பொருள் அதற்கு இருந்தாகவேண்டும். வகுக்கப்பட்டவை எல்லையும் அளவும் கொண்டவை. உண்மைக்கு அவ்விரண்டும் இருக்க இயலாது. எனவே சொல்லப்பட்ட அனைத்தும் குறையுண்மைகளே.”

சொற்களைப் பயன்படுத்துவதில் வல்லவரும் சொற்களை வழங்குவதில் வள்ளலும் சொற்களின் பேரரசர் போன்ற ஒருவராலேயே இப்படி சொற்களின் எல்லையையும் குறையையும் உண்மையிலேயே உணர்ந்திருக்க முடியும்.          

சொல்லே புனைவுதான் என்று தோன்றுகிறது.  பெற்றோர் இவ்வுடலுக்கு ஒரு பெயர் புனைந்து தர சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்கனவே புனையப்பட்ட பெயர்கள் இருக்க ஒரு புனைவு உலகத்தில் நுழைந்து புனைப்பெயருடன் வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.    

சர்வதனும் யௌதேயனும் ஊழுடன் இணைந்து ஒழுக மனம் கொண்டவர்கள்.  தங்கள் திறன்களின் எல்லை உணர்ந்தவர்கள்.

ப்ரத்யும்னனின் மரணம் பற்றி அபிமன்பு அவனிடம் பேசும் போது "பூர்ஜன்" என்று சொல்கிறான்.  அடுத்த அத்தியாயத்தில் "பூர்ஜ மரப்பட்டைகள்" என்றும் போஜர் குடியினன் சவிதன் என்றும் வந்தபோது அதில் ப்ரத்யும்ன் கொல்லப்படும் விதம் பற்றிய குறிப்பு உள்ளது என்று கருதினேன்.  பிறகு எதற்கு அந்த ஆராய்ச்சி என்று உவகை தரும் இத்தருணங்களின் பெருக்கில் அவ்வாறே செல்கிறேன்.  இன்று பலராமரின் வெண்ணிற உடல் "பூர்ஜமரத்தின் அடிபோல" என்று ஓர் உவமை.


அன்புடன்
விக்ரம்
கோவை