ஓர் உண்மையை நாம் நேரில் அருகில் அறியும்போது எப்படி
எதிர்வினை ஆற்றுவோம் என்பதை பிரத்யும்னன் அவன் மரணத்தைப்பற்றி அபிமன்யூ சொல்லிக்கேட்டபோது
நடந்துகொண்ட முறை காட்டுகிறது. அரிய சித்தரிப்பு. அதை நம்பாமல் ஏளனம் செய்து தவிர்க்க
முயல்கிறான். ஆனால் கூடவே அவன் அடிமனசு அதை திட்டவட்டமாக உண்மை என ஏற்றுக்கொள்கிறது.
ஆகவே நிலைகுலைகிறான். அதை மறக்கவும் முடியவில்லை. ஆனால் அதை ஏளனம் செய்தாலொழிய அதை
கடந்து வாழமுடியாது. பிரத்யும்னன் அந்த போஜர்குலச்சிறுவனின் பெயரை மறக்கவே மாட்டான்.பூர்ஜன்
என்ற பெயருள்ளவனை வாழ்க்கை முழுக்க தேடிக்கொண்டே இருப்பான். அந்த விந்தை அடிக்கடி நிகழ்கிறது.
வாழ்க்கை இப்படித்தான் ஊடும்பாவுமாக முடையப்பட்டுள்ளது. கொஞ்சம் தெரிகிறது, நிறைய தெரிவதில்லை.
சரவணன்