ஜெ,
ஒரு சிறு விஷயம்தான். யாதவநகருக்கு
வரும் கண்ணனை அவர் மைந்தர்களும் யாதவர்களும் எப்படி புறக்கணிக்கிறார்கள் என்பது. ஆனால்
ஒரு துப்பறியும் நாவலுக்குரிய அடுத்தது என்ன என்னும் விசையுடன் சென்றது அந்நாவல்பகுதிகள்.
உண்மையிலேயே என்ன நிகழும் என தெரியாமல் இருந்தாலும் நடந்ததும் அட இதுதானே நடக்கும்
என்றும் தோன்றியது. ஆரம்பம் முதலே அதுதான் சொல்லப்படுகிறது. எட்டுதேவியரும் பாகம்பிரியாள்கள்
என்று சொல்லப்பட்டது. துவாரகையின் மகளிர் எல்லாம் ராதைகளே என்று சொல்லப்பட்டது. ஆகவே
பிரிவதெல்லாம் ஆண்களின் அகங்காரம் மட்டும்தான். பெண்கள் அல்ல. ஆகவே புல்லாங்குழல் இசைக்கு
மயங்கியவர்கள் வந்துவிட்டார்கள்.
புல்லாங்குழல் இசையை கிருஷ்ணனின்
அழைப்பாகவும் கிருஷ்ணபக்திக்கான ஆதாரமாகவும் குறியீடாகப் பயன்படுத்துகிறீர்கள். அவனுடைய
குழலோசையைக்கேட்டு பக்தர்கள் அவனைநோக்கி பசுக்களைப்போலச் செல்கிறார்கள். மெல்லமெல்ல
தாசபாவம், கோபிகாபாவம் இரண்டும் மட்டுமே கண்ணனைச்சூழ்ந்திருப்பதையும் அகங்காரமும் அரசியலும்
கொண்டவர்கள் அவனைப்புரிந்துகொள்ளாமல் விட்டுவிடுவதையும் காட்டுகிறது வெண்முரசு. அவனே
சொல்வதுபோல பெண்கள், பெண்ணென்று ஆனவர்கள் மட்டுமே அவனைப்புரிந்துகொள்ளமுடியும். மற்றவர்கள்
அவனருகே போகலாம், ஞானம் வழியாகச் செல்லவேண்டும். அது எளிமையானது அல்ல. அர்ஜுனனுக்கே
மனத்தடுமாற்றம் வந்தது. ஆனால் அபிமன்யூவுக்கு அந்த மனத்தடுமாற்றம் ஏற்படப்போவதில்லை.
அப்பன் இன்னும் அறியாத வருங்காலரகசியங்கள் முழுக்க மகனுக்கே தெரிந்துவிட்டது
செல்வராஜ்