அன்புநிறை ஜெ,
ஒழிந்திருக்கும் அவைக்கூடம் எவ்விதமோ நிறைந்துவிடுமென்று தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. அபிமன்யுவோடும் பிரலம்பனோடும் சுதமரோடும் மனம் தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் முரளியோடு இளைய யாதவர் புகவிருக்கும் பேரவை எண் மங்கலங்கள் பொலிய நிறைந்துதானிருக்கும் என்று அகம் சொல்கிறது.
துவாரகையில் நுழையும்போது அபிமன்யு-பிரலம்பன் இடையே நிகழ்ந்த உரையாடலில் வருவது போல
//அயன்மை கொண்டவர்கள் ஆண்கள் மட்டும்தான், பிரலம்பரே. பெண்களை பாருங்கள். அவர்கள் அனைவரும் காத்திருக்கும் விரகோத்கண்டிதைகளாக இருக்கிறார்கள். அவ்வுலகுக்குள் நுழையும் ஆணென எவரும் இங்கில்லை. அங்கே ஆண் என ஒருவனன்றி பிறர் இல்லை.//
பெண்களால் நிறையக்கூடுமோ அவை? அவையை நோக்கி வருபவர்களை தடுக்க வேண்டாம் என்ற ஆணை அதற்காக இருக்கக் கூடுமோ?
//இந்த அவையில் வந்து அமரும் எந்த யாதவனும் அவர்களின் குலத்திலிருந்து விலக்கப்படுவான் // குலமென்றும் குடியென்றும் கொடியென்றும் கோலென்றும் கட்டும் தளைகள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பிரேமையின் உலகில் உலாவும் குழந்தைகளும் பெண்களுமான நிரை வருமென நம்புகிறேன்.
பிரேமையால் நிரம்பிய இடங்களில் வெறுமை ஏது?
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள சுபா
அத்தியாயம் வெளிவருவதற்கு முன்னரே ஊகித்துவிட்டீர்கள்ல். போகிற போக்கைப்பார்த்தால் அடுத்த அத்தியாயத்தை எழுதி அனுப்பும்படிக் கோரலாம் போலிருக்கிறதே
ஜெ.