ஜெ
வெண்முரசின் வடிவம்
பற்றி நானும் நண்பர்களும் பேசிக்கொள்வதுண்டு. எப்போதும் கதை கொஞ்சமாகத்தெரிந்திருந்து
மேலும் மேலும் என்ன என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது மிகப்பெரிய ஒரு சிக்கல்.
நாம் எதிர்பாராதது வந்துகொண்டிருக்கும்போது நாட்கணக்கில் அது தொடரும்போது ஒரு சின்ன
ஏமாற்றம். நண்பர் அதைச் சொன்னார். பாண்டவர்களுக்கு நாடு உண்டா இல்லையா என்ற கேள்வி
இருக்கும்போது கர்ணன் என்ன ஆனான் என்பது தொக்கி நிற்கும்போது யாதவர்களின் கதைகளை இப்படி
விரிவாகச் சொல்லவேண்டுமா என்ன என்று.
ஆனால் யாதவர்களின்
கதைகளை மகாபாரதம் மௌசால பர்வத்தில் தனியாகச் சொல்கிறது. மகாபாரதத்தின் கட்டமைப்பு இணைப்புகளால்
ஆனது. ஆகவே இங்கே போரெல்லாம் நடந்தபின்னர் முன்னாடி நடந்தது இது என முன்னாடி சொன்னதற்கு
மாறாக ஒன்றை அது சொல்லும்போது பெரிய பிரச்சினை ஏதும் தெரியவில்லை. ஆனால் வெண்முரசு
ஒரே ஒழுக்காகச் செல்லும் கதை. போருக்குப்பின் அடித்துச்செத்த யாதவர்கள் போருக்குமுன்
எப்படி இருந்தார்கள், ஏன் அவர்கள் கிருஷ்ணனுடன் நிற்கவில்லை, ஏன் பலராமர் யாதவர்களை
கைவிட்டு காட்டுக்குச் சென்றார் என்பதெல்லாம் பெரிய கேள்விகள். அதை அப்படியே விட்டுவிடமுடியாது.
ஆகவே இரண்டையும்
ஒன்றாக இணைத்துவிட்டீர்கள். யாதவக்குலப்பூசலும் பாண்டவர்களின் உரிமைக்கோரிக்கையும்
உபபாண்டவர்களின் குணச்சித்திரங்களும் ஒரே கதையாக வெளிவந்தன. இப்போது பார்க்கும்போது
இனி எங்குமே இந்தக்கதைகளைச் சொல்லமுடியாது என்றுதான் தெரிகிறது. பலகோணங்களில் சிந்தித்தும்
குழப்பமடைந்தும்தான் இந்த இடத்தைத்தேரிந்த்டுக்கிறீர்கள் என தெரிகிறது.
சத்யமூர்த்தி