ஒரு பெண் பத்து மாதம் தன் குழவியை வயிற்றில் சுமக்கிறாள். பின்னர் பெரும் பிரசவ வலிகொண்டு பெற்றெடுக்கிறாள். பெற்றெடுத்த குழந்தையை நெஞ்சிலெடுத்து அணைத்துக்கொள்கிறாள். அக்குழந்தைக்கு அமுதூட்டுகிறாள். அக்குழந்தையை கொஞ்சி விளையாடி ரசிக்கிறாள். அக்குழந்தை நோய்வாய்ப்படுகையில் கவலைகொண்டு பராமரிக்கிறாள். அக்குழவி உடல்திடம்கொண்டு வளர்வதில் பெருமிதம் அடைகிறாள். பின்னர் அது பேசிச் சிரித்து பழகுவதில் மகிழ்வுகொள்கிறாள். மற்றவர் அதன் அழகை அறிவை புகழ்வதில் பெருமைகொள்கிறாள். எப்போதும் அவள் அக்குழவிக்கு தாய் என்றாலும் இதில் எந்நிகழ்வில் அவள் தன்னை தாயென முற்றிலும் உணர்கிறாள், எப்போது அவள் தாய்மை உணர்வு பொங்கிப் பெருகும் என்று சிந்தித்துப்பார்க்கிறேன். அது அவள் தம் குழவிக்கு அமுதூட்டுகையில்தான் என்று நினைக்கிறேன்.
பொதுவாக விலங்கினத்தில் ஒரு தாய் விலங்கு, குட்டிகள் தானே இரைதேடக் கற்றுக்கொண்ட பின்னர் அது அவற்றின் தாய் என்ற உறவையே மறந்துவிடுகிறது. அதாவது விலங்குகள்பொதுவாக தன் குட்டிகளுக்கான தாய்மைப்பாசத்தை அது பாலூட்டும்வரை அல்லது அதற்கு இரை தேடித்தரும் வரையில் மட்டுமே கொண்டிருக்கிறது. ஆனால் மனித இனத்தில் பிள்ளைகளுக்கு உணவு சமைத்து தருவது என்பதை ஒரு அன்னை தன் வாழ்நாள் முழுதும் உளமகிழ்வுடன் தொடர்கிறாள். இப்படியாக தாய்ப்பாசம் ஒரு பெண்ணுக்கு தன் பிள்ளைகளிடமிருந்து நீங்குவதேயில்லை. இப்படி நீளும் தாய்ப்பாசம் குடும்பம் என்ற அமைப்பை மனித இனத்தில் நீடித்துவைக்கிறது. குடும்ப அமைப்புகள் இணைந்து சமூக அமைப்பு உருவாகின்றன.
இன்று மனித சமூகம் அடைந்திருக்கும் அனைத்து முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைந்தது இப்படி நீடித்து இருக்கும் தாய்மை உணர்வுதான் என்று நான் கருதுகிறேன். ஒரு பெண் தன்னை முழுமையான தாய்மை உணர்வை அனுபவிப்பது தன் பிள்ளைகளுக்கு உணவளித்து அவர்கள் உண்ணுதலைல் பார்க்கையில்தான் என்று நான் கருதுகிறேன். பிள்ளகள் எவ்வயது ஆனாலும் தன் கையால் உணவிட்டு அவர்கள் ஆவலுடன் உண்கையில் தன் மார்பகத்திலிருந்து சிறு குழவியாக பாலருந்திய முதல் கணத்தின் பூரிப்பை, நிறைவை, அவள் அடைகிறாள். இது ஒரு தாய்க்கு இறைவன் அளித்திருக்கும் பரிசு. உலகம் முழுதும் வென்று தன் காலடியில் வீழ்த்திய அரசனுக்கும் இந்த நிறைவு வராது என்று கருதுகிறேன்.
அசலை தன் பிள்ளையான துருமசேனனுக்கு உணவிட்டு அவன் உண்ணுதலைக் கண்டு மகிழ்ந்து அவள் தாய்மை உணர்வில் திளைக்கும் நிகழ்வு இன்று வெண்முரசில் காட்சிப்படுத்தப்படுகிறது. அரச குடும்பங்களில் பிள்ளைகளுக்கு உணவூட்டும் வாய்ப்பு அரசிகளுக்கு அடிக்கடி வாய்ப்பதில்லை. அதுவும் ஆயிரம் பிள்ளைகளாக பெருகி இருக்கும் கௌரவர் பிள்ளைகளுக்கு அவர்களின் அன்னையர் உணவை தன் கையால அளிப்பது என்பது அன்றாட நிகழ்வாக இருப்பது கடினம். இன்று அவள் தன் மகனை அமரவைத்து அருகமர்ந்து உணவளிக்கிறாள்
.
துருமசேனனை கைபற்றி அழைத்துச்சென்று மணையில் அமரவைத்த அசலை “இரு, நான் பரிமாறுகிறேன் உனக்கு” என்றாள். “அதற்குள் இவர்கள் தின்று முடித்துவிடுவார்கள்” என்றான் துருமசேனன். “பொறு” என்றபின் அவள் திரும்பி அன்னம் பரிமாற ஏனத்தை எடுத்து அகப்பையை அதிலிட்டு திரும்புவதற்குள் துருமசேனன் மாட்டுத் தொடை ஒன்றை எடுத்து உண்ணத் தொடங்கிவிட்டான். கையில் அன்னத்துடன் அவள் அவனைப் பார்த்து சலிப்புடன் தலையசைத்தாள். அவன் விழிதூக்கி “இங்கு உணவு இன்னும் சுவையாக இருக்கிறது, அன்னையே” என்றான். அவள் சிரித்து “உண்ணுக!” என்று சொல்லி அவன் தலையைத் தொட்டு வருடினாள்.
அவள் இயல்பாக கைநீட்டி அவன் முழங்காலை தொட்டாள். பன்றி நெஞ்சை பற்களால் நொறுக்கி ஊனை இழுத்து மென்று தின்றுகொண்டிருந்த அவன் திரும்பி அவளைப் பார்த்து புன்னகைத்தான். அத்தருணத்தில் அனைத்தும் விலகி மீண்டும் கருவறையிலிருந்து குருதி மணத்துடன் வெளிவந்தான். கண்ணீர் மல்குமளவுக்கு அவள் உளநெகிழ்வை அடைந்தாள். இதழ்களை அழுத்தியபடி தலைகுனிந்து பெருமூச்சுவிட்டாள்.
தண்டபாணி துரைவேல்