Wednesday, January 3, 2018

பிம்ப மரணம்



ஜெ,

இன்றைய நடையின் போது ஒரு பழைய உரையாடல் அசலைக்கும் பீஷ்மருக்குமான உரையாடலை நினைவு படுத்தியது.

முதல் நாள் அசலையும் பீஷ்மரும் உரையாடுவதை வாசித்தபோதே அது பெரிய நிலைகுலைவை உருவாக்கியது. அசலை பீஷ்மரை அதுவரை அவர் சூழ்ந்திருந்த அனைத்து பிம்பங்களையும் கடந்து சென்று அவரை உடைக்கிறாள். தேடலின் பாதையில் சாதகன் உடைக்கப்படும் தருணம் மிகவும் அபூர்வமாகவே வரும். அத்தனை நீண்டதும், நாடகங்கள் நிறைந்ததுமான பீஷ்மரின் வாழ்க்கையிலேயே இரண்டு முறைதான் வந்திருக்கிறது.  உடனே நாம் நினைப்போம், சாதகர்கள் அந்த தருணத்தை அப்படியே இரு கைகளாலும் ஏந்திக் கொள்வர் என்று. ஆனால், பெரும்பாலானோர் அந்த உடைவுத் தருணத்தை எளிதில் கடந்து சென்று விடுவர். அல்லாமல் அந்தக் கணத்தை எதிர் கொண்டால் அது வரையிலான சாதகத்தை, வாழ்க்கையை பொருளற்றது என்று உதற வேண்டியிருக்கும். மீண்டும் முதலிலிருந்து கட்டி எழுப்ப வேண்டும். அந்த நரகத்திற்கு அஞ்சி அது வரையிலும் அவர்கள் கொண்டிருந்த அறியாமையை மூர்க்கமாக பற்றிக் கொள்வர், அந்த உடைவுத் தருணத்தைக் கடக்கும் வரை. ஆச்சர்யமாக, உடைவிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் அதே சாதகத்தைத் தொடர்வர். கடந்த சில வருடங்களில் சிலருக்கு நிகழ்ந்த உடைவுத் தருணங்களை எப்படிக் கடந்து வந்தார்கள் என்பதை அருகிருந்து பார்த்திருக்கிறேன். 

அஞ்சாமல், எண்ணாமல், அதுவரையில் தான் பற்றிக் கொண்டிருந்தவற்றை உதறிச் சென்று தன்னை உடைத்ததைப் பற்றிக் கொள்பவனே உண்மையான சாதகன். அதன் பொருட்டு அவன் ஒன்றுமே அடையாமலானால் கூட, முற்றிலும் எஞ்சாமலே ஆனாலும் கூட நன்றே, முயன்றதே போதும் என்றே எண்ணுவான். அர்ஜுனன் அப்படித்தான் இருக்கிறான். அவன் காண்டீப, கிராத பயணங்களை எண்ணிக் கொண்டேன். இன்றைய அத்தியாயத்தில் திருதாவே அதைத்தான் செய்கிறார்.

பிதாமகர் மீண்டும் ஒரு  உணர்ச்சிகரமான தருணத்தின் வழியாக தன்னை பழையபடியே திரட்டிக் கொள்வார் என்றே எண்ணினேன் அந்த அத்தியாயத்தின் துவக்கத்தில். அவர் அந்தப் பேருரையின் வழியாக அதையே செய்தார். அவர் இங்கிருக்கும் எதையும் கவனிக்காமல், மேல் நோக்கி சரித்த தலையும், மூடிய கண்களுமாக இருப்பதே இவை எவற்றையும் கவனிக்காமல், அவராக உருவேற்றி வைத்திருக்கும் உணர்ச்சிகரத்தின் உச்சியில் தன்னை வைத்துக் கொள்ளத்தான். எவற்றையெல்லாம் தவிர்த்தாரோ  அவற்றில் எல்லாம்தான் அவர் பதினெட்டு நாட்களும் படுத்துக் கிடக்க நேர்ந்தது. புறப்பாட்டில் என்று நினைக்கிறேன், ஒரு வரி வரும், "இளமையில் வீட்டை விட்டு வெளியேறாதவர்கள் முதுமையில் வெளியேற வேண்டியிருக்கும்" என்று. அதை எண்ணிக் கொண்டேன். கூடவே கார்க்கியைப் பற்றி நித்யா, அவர் உண்மையான மரணத்தை அஞ்சவில்லை, ‘பிம்ப மரணத்தை’ அஞ்சினார் என்று சொன்னதையும். 


ஏ.வி.மணிகண்டன்