Saturday, January 27, 2018

தாரையும் துச்சலையும்



அன்புள்ள ஜெ ,

ஒரு கதாபாத்திரத்திற்கு அதன் உடல் மொழியில் ஒரு விலங்கின்  இயல்பையும் சேர்த்து விடுகிறீர்கள்  , துச்சளை யானை என்றால் , தாரை  மான் ,அவள் ஓடி வருவது எனக்கு துள்ளி  வருவது போல தோன்றும் :)

பெண்கள் திருமணமான  உடனேயே  வேறொரு பெண்ணாக ,முதிர்ந்தவளாக   மாறிவிடுவதை  கவனித்திருக்கிறேன்  , அப்படி என் அக்கா சட்டென மாறியதை ஆச்சிரியதுடன் பார்த்தேன் . உலகறியாத  ஆனால் அறிந்ததாய் எண்ணி கொள்கிற ஒரு திசையறியா ஆட்டுகுட்டியை மேய்க்கிற  பொறுப்பு வந்துவிடுவதால்  உருவாகும் மாற்றம் இது என  விகர்ணன் வழியாக அறிந்தேன் !  இருட்டில்  தாரகையின் விழியில் வெளிவந்த புன்னகை அதை சொல்லியது  :)


சுரங்கவழி காட்சியை ரசித்தேன் , சறுக்கு நீர்வழி விளையாட்டு போல !
39 பகுதி அத்யாய முடிவில் துச்சளையை எதுவோ சீண்டியதாக  நினைத்தேன் , அது கருநாகமோ  என எண்ணி கொண்டேன் , அதன் இயல்பு அல்லது அது விரும்பிய  ஒன்றை துச்சளையில் படர செய்தது என எண்ணி கொண்டேன் .

துச்சாதனன் நிலை வலி கொண்டது , தன் தங்கை தொடாதே  என்பது அன்னை தன்னை தொடாதே என்பதை போல , அது வலியின் உச்சம் .

துரியோதனனின் நிதாத்தம்  கசாப்பு  கடைக்காரன் விலங்கின்  கழுத்தறுக்கும் போது கொள்ளும் நிதானம் போல இருந்தது , தவறு தொடர்ந்து செய்வதன் வழியாக கிடைக்கும் நிதான தியான நிலை அது  என எண்ணிகொண்டேன் , அனுபவதிருடன்  அனுபவகொலைகாரன்  இப்படியான நிதானத்துடன்தான் இயங்குவான்  என நினைத்தேன் .

அந்த மனநிலைக்குள் துச்சளையின் வார்த்தை உள் செல்லாது ,அவன் வாழ்வது  வேறுஉலகம் என நினைத்தேன் ,

தன் முன்பு  வாழ்ந்த உலகை துச்சளை வழியாக காண்கிறான்  அல்லது அவள் வழியாக செல்ல விழைகிறான் என எண்ணினேன் ,நாம்  சிறுவயது  கடந்த காலத்தை எண்ணி மீண்டும் அங்கு செல்ல முடியுமா , அந்த வாழ்வு திரும்ப அமையுமா என ஏங்குவோமே அதை போல .

துச்சளையுடன் காந்தாரி  மற்றும் சகோதிரிகள்  இயல்பாக உரையாட முடியாததற்கு  நான் வேறு காரணம் நினைத்தேன் . அதாவது உள்ளூர இவர்கள் துரியோதரனின்  விருப்பதிற்கு துணையாகவே  இருக்க விரும்புகின்றனர்    , அதற்கு தடையாக இருக்கும் கணவனின் சார்பாக துச்சளை இருப்பதால்தான் அவள் மீது இவர்கள் விலக்கம் கொள்கின்றனர் என நினைத்தேன் , ஆனால் துரியோதனனிடம்  துச்சளை பேசும்போது அம்மாவின் வார்த்தையாக  தன்னை முன் வைக்கிறாள்  , ஒரு வேளை தந்தையின் சார்பாக மட்டும் நின்றிருந்தால் துரியனின்  மனதை அசைக்க  முடியாது ,அல்லது தந்தையின் சார்பு என்பதால் இயல்பாகவே  எதிர்நிலைக்கு  சென்று விடுவார் என்பதை யூகித்து  செய்திருக்கலாம்  என நினைத்தேன் .
நான் எண்ணி கொண்டது துச்சளை திருதராஷ்டிரனின் பெண் உருவம்  என .

ராதாகிருஷ்ணன்