Friday, February 9, 2018

சொல் வணிகம்




அன்புள்ள ஜெ

இங்குள்ளோர் ஒவ்வொருவரையும் நால்வகை வாழ்வுநெறிகளுக்கும், குடியறத்திற்கும், குலமுறைமைகளுக்கும் கட்டுப்பட்டவராக ஆக்குவது தந்தையும் தாயும் ஆசிரியரும் குடியும் அளிக்கும் சொல்லுறுதிகளே. ஒவ்வொரு குடியும் பிறிதொன்றுடன், ஒவ்வொரு குலமும் பிற குலங்களுடன் கொண்டுள்ள சொல்லுறுதிகளால் உருவாக்கப்படுவதே நல்லாட்சி. பல்லாயிரம் சொல்லுறுதிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கும் கட்டமைப்பும் கொண்டவை. அனைத்திற்கும் மாறாமல் இருப்பது ஒன்றுண்டு, சொல்லுறுதி என்பது மானுடரால் கடைப்பிடிக்கப்படவேண்டியது என்னும் பொது ஏற்பு.”

பாண்டவர் சிற்றவையில் கிருஷ்ணன் பேசுவது நவீன உலகில் நாம் trust, social capital, social contract என்றெல்லாம் சொல்பவையே. (இதே போன்ற கருத்துக்கள் வண்ணக்கடலில் தமிழ்நிலத்து அங்காடிகள், பின்னர் துவாரகையின் அங்காடிகளை பற்றி பேசும்போதும் வந்துள்ளன).

பண்டைய இந்தியாவில் இதை பற்றிய விவாதங்கள் இருந்திருக்கிறதா? அதாவது, அறம் என்ற பெரிய கருத்துப்பரப்பினுள் சொல்லுறுதியும் social capitalம் பேசப்பட்டிருக்கிறதா?

நன்றி
மது



அன்புள்ள மது

மகாபாரதம் ஒரு நெறிநூல். உண்மையில் நூற்றுக்கணக்கான நெறிநூல்கள் வகைதொகையில்லாமல் உள்ளே செருகப்பட்டு பிரம்மாண்டமான கலைக்களஞ்சியமாக ஆக்கப்பட்டிருக்கிறது அது. அவையனைத்திலும் மையமாகத் தெளிந்துவரும் நெறி சொன்னசொல்லுக்கு உண்மையாக இருப்பது என்பது. அது வணிகத்திற்கு மிக அவசியமானதாக இருந்திருக்கலாம் என்பது ஓர் ஊகம். ஆனால் நேரடியாக வணிகம் சம்பந்தமான செய்திகள் புராணங்களில் இல்லை.

அந்த ஊகத்தை நிகழ்த்தக் காரணமாக அமைவது அர்த்தசாஸ்திரம். அது வணிகச் சொல்லுறுதி பற்றியும் அது மீறப்படுவதற்கான தண்டனைகளைப்பற்றியும் சொல்கிறது. மகாபாரத காலகட்டத்தில் வணிகம் உச்சநிலையை அடைந்திருந்தது என மகாபாரதமே காட்டுகிறது. அதிலுள்ள ஆடம்பரப் பொருட்களின் பட்டியல், வணிகர்களைப்பற்றியச் செய்திகளே போதும். வணிகர்குழுக்கள் [guilds] அன்றே உருவாகிவிட்டிருந்தன என்றும் அவை சோஷியல்கேப்பிடல் அடிப்படையில் இயங்கிவந்தன என்றும் ஊகிக்கலாம். அதற்கு ஆதாரமாக அமைவது பலவகையான களிமண் அச்சுக்கள். அவை பொருட்கள் மேல் முத்திரை பதிப்பதற்குரியவை. அதுவே அரச அங்கீகாரம் கொண்ட பொருள்வணிகத்துக்கான சான்று. அந்த முத்திரையே ஒருநாணயமாகச் செயல்பட்டிருக்கவேண்டு,மௌரியர் காலகட்டத்தில் அவை இருந்தமைக்கு மேலும் சான்றுகள் உள்ளன.    


ஜெ