Sunday, April 8, 2018

பீஷ்மரும் கர்ணனும்



இனிய ஜெயம்

கர்ணனை தொடர்ந்து பின் தொடர்வதால் கர்ணன் நீலன் சந்திப்பு நிகழ்வுகள் இசைவாக இருந்தன . பீஷ்மரின் அக கொந்தளிப்பை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடர்வதை நிறுத்தி விட்டோம் .அல்லது அவ்வாறான சித்தரிப்பு சூழல் .பெரும்பாலும் பீஷ்மர் மிக மென்மை கொண்டவராக ,விட்டு விலக்கியவராக ,மௌனம் கொண்டவராக ,அமைதியும் மெல் அசைவும் கொண்டவராகவே  சக கதாபாத்திரங்கள் வழியே அவரை பார்த்து பார்த்து அவ்வாறே பதிந்து விட்டது .

நீலன் பீஷ்மர் சந்திப்பு ,நச்சரவம் சீறி  பத்தி உயர்த்தும் வேகத்திலும் கொந்தளிப்பிலும்  நிகழ்ந்து சுழற்றி அடிக்கிறது .சமையலில் இறுக மூடிய பானைக்குள்  நிகழும் கொதிப்பை அதன் உச்ச விசையில் அந்த பானையை திறந்து பார்த்தால் மிகுந்த ஆச்சர்யம்  ஏற்படும் .  நாம் ஊற்றிய நீரும் போட்ட அதே அரிசியும் இணைந்து போடும் கூப்பாடும் வேதனையும்  துணுக்குற வைக்கும் .

அப்படிப்பட்ட உலை கொதிக்கும் பானை ஒன்றினை சட்டென திறந்து பார்த்தது போலிருந்தது இன்றைய பீஷ்மரின் அக சித்திரம் .  பீஷ்மர் ''தான் ''எனும் உரு கொண்டு எழுந்த அத்தனை அலகையும் நீலன் அடித்து உடைக்கிறான் . அவர் சுமந்து திரியும் அஸ்தினாபுரி  கடலின் அலை கூட அல்ல ,வெறும் குமிழி என காட்டி விடுகிறான் . தேவ விரதன் எனும் ஆணவம் அம்பையின் மறு வடிவான அந்த பெண்ணின் கணவனை கண்டதும் கிழிந்து நார் நாராகிறது .

அவர் விட்டு விலகிவிட்டதாக பாவிக்கும் அனைத்தும் முதிய கர்ணன் வாயில் ஒளித்து வைத்துக்கொண்ட குண்டலம் போலவேதான் என அறிகிறார் .  சம்படை மரணத்தின் போது பீஷ்மரை அஸ்தினாபுரி அழைத்து செல்ல நீலன் வருகிறான் .  அப்போது பீஷ்மர் நீலனை விட பெரிய ஞானி இல்லையா மௌனமாக வானத்தில் வானத்தில் வட்டமிடும் கழுகை சுட்டி காட்டுகிறார் .  தம்பி நீ வெறும் புழு .  என இன்று பீஷ்மரை நீலன் உடைத்து எறிகிறான் . மிஞ்சியது தனுர் ஞானம் .அதிலும்  கைகள் இல்லாதவரும் கண்கள் அற்றவரும் இவரை விட சிறந்து நிற்கிறார்கள் .பீஷ்மரின் ஒரு அம்பு கூட அவர்களை தொட மறுக்கிறது . ஆயிரத்தில் ஒன்று பிழைக்கிறதே என வயிற்றிலும் வாயியிலும் அடித்துக் கொண்டவர் .ஆயிரத்தில் ஒன்று கூட இலக்கை அடிக்க இயலாததை காண்கிறார் .

அனைத்தையும் உடைத்து எறிந்த பின் நீலன் சொல்கிறான் . நீ புழுவும் அல்ல பறவையும் அல்ல சத்ரியன் ஆகிய  பீஷ்மன் . நீ மூதாதையும் அல்ல தேவ விரதனும் அல்ல சத்ரியன் ஆகிய பீஷ்மன் .   நீ காலரும் அல்ல ,கண்டகாலரும் அல்ல  சத்ரியன் ஆகிய பீஷ்மன் .  நீ தியாகியும் அல்ல ,பழி ஈட்டித் தர வந்தவனும் அல்ல சத்ரியன் ஆகிய பீஷ்மன் .

வாழ்நாளெல்லாம் இங்கிருக்கும்  அனைத்திலும் ஆகும் அனைத்திலும் , பீஷ்மரை பொருந்தாமல் நிற்க செய்த ,அவரே வாழ்நாளெல்லாம் மகிழ்ந்தும் வருந்தியும் வளர்த்தெடுத்த  ஆணவத்தை உடைத்து உருக்கி ,இங்கிருக்கும் நிலையுடன் அவரை பொருத்தும் செயலாற்றலாக நீலன் அதை மாற்றி விட்டான் .

அர்ஜுனனாலும் எதிர் நிற்க இயலா செயலாற்றல் , சிகண்டி முன் கனிந்து தன்னை நிறைவு கொள்ளச் செய்யப்போகும் செயலாற்றல் .

கடலூர் சீனு