வணக்கம்,
இந்திரநீலம் வரையிலான வெண்முரசின் முதல் ஏழு நாவல்களை வாசித்திருக்கிறேன். தற்போது எழுதழல் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். எழுதழலில் பாணாசுரன் குறித்த விரிவான சித்திரம் வருகிறது. அதில் பாணாசுரன் தொல் சிவத்தொடும் அம்மையோடும் சிவகணங்களில் ஒன்றாய் முன்பு வாழ்ந்ததாகவும், கணபதிக்கும் குமரனுக்கும் இளையவனென இருந்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இது போலவே முந்தைய நாவல்களிலும் சிவன் பார்வதி மற்றும் ஆறுமுகன் குறித்த ஒருங்கிணைந்த கதைகள் சூதர்கள் பாடுவது போலவோ அல்லது கதை மாந்தர்கள்
பேசுமொரு தொன்மமாகவோ முன்வைக்கப்படுகிறது.
இதனடிப்டையில் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன். சிறுபிள்ளைத்தனமானதென்றால் வழக்கம்போல பொறுத்தருள்க.
ஒன்று, நாம் இன்று காணும் ஒருங்கிணைந்த இந்து மதமென்பது வித்யாரண்யர் எனும் மாதவரால் ஆயிரத்து இருநூறு ஆடுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதென்றும், அதற்கு முந்தய காலங்களில் இந்திய நிலப்பரப்பில் ஆறு தனிப்பட்ட மதங்கள் மட்டுமே இயங்கி வந்ததாகவும் உங்களின் புத்தகங்கள் மற்றும் உரைகளின் வாயிலாக அறிகிறேன். என்றால் மகாபாரத காலகட்டத்தைப் பேசும் நாவலில் இன்றைய இந்து கடவுள்களின் குடும்பச் சித்திரம் வருவதன் பொருள் என்ன.
இரண்டு, பொதுவாகவே அசுரர்கள் அனைவரும் சிவபக்தர்களாக சித்தரிக்கபடுவதும், மற்ற தெய்வங்களால், முக்கியமாக விஷ்ணு அவதாரங்களால் வீழ்த்தப்படுவதும் ஏன்? தொல்குடி அசுரர்களின் தொல்தெய்வம் சிவமெனில் விஷ்ணு யாருடைய தெய்வம்? இன்றைய சுடலை மாடனும் ஐய்யனாரும் கூட ஏன் விஷ்ணுவின் அம்சமாகக் கொள்ளப்படவில்லை?
அசுர வேதமென்பது என்ன, அவர்களைப்பற்றிய காவியமோ வரலாறோ இன்று எங்கேனும் எஞ்சியிருக்கிறதா? அசுர வேதம் என்ற காட்டு யானை மேல் அம்பாரியாய் நாராயண வேதம் இருக்குமென்று கிருஷ்ணன் வாக்களித்த பின்னும், மகாபாரதப் போரில் அந்தக்கூட்டணியே வென்ற பின்னும், அசுரர்களுக்கான வரலாறு எழுதப்படாதது ஏன்?
அன்புடன்
மாலையப்பன் சரவணன்