ஜெ
விதுரர் தந்தையின் அன்பைப்பற்றிச் சொல்லும் இந்த வரிகள் மிக முக்கியமனாவை. அவை ஏன் அவரால் சொல்லப்படுகின்றன என்பதும் அந்த அத்தியாயத்திலேயே உள்ளது.
தந்தையை முழுக்க வெறுத்தவன் தன்னைத்தானே முற்றிலும் அகற்றியவன். அனைத்து அன்புகளையும் அவன் ஐயப்படுவான். ஒவ்வொருவரிடமும் ஏமாற்றம் கொள்வான். மேலும் பெரிதென்று ஒன்றில்லை என்று உணர்வதற்குள் அத்தனை உறவுகளையும் கசந்து வீணடித்திருப்பான். இறுதியில் அவனுக்கு முற்றிருளன்றி பிறிதேதுமில்லை. ஒருதுளி அன்பேனும் உன் தந்தைக்கென உன்னில் எஞ்சட்டும். அத்துளி அமுதைப் பெருக்கி நீ உன் விண்ணுலகை அடைவாய்.
நான் இதை கவனித்திருக்கிறேன். பொதுவாக மனிதர்கள் மேல் அவநம்பிக்கை கொண்டவர்கள், அன்பை சந்தேகப்படுபவர்கள் அப்பாவை நேசிக்கமுடியாதவர்களாக இருப்பார்கள் அப்பாவுடனான உறவு கசந்துவிட்டால் அதன்பின் எல்லா உறவும் சந்தேகமாக ஆகிவிடுகிறது. அரசாங்கம் தெய்வம் எதையும் நம்பமுடியவில்லை. ஒருவகையான இறுக்கம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. அப்பா செத்துப்போன பிறகாவது அப்பாவை விரும்ப ஆரம்பித்தால் தப்பித்தோம். என் அண்ணாவை வைத்து இதை நானே யோசித்திருக்கிறேன்
ஆர்