கௌரவர்கள் பக்கம் 11 அக்ஷௌகிணிப் படைகளும், பாண்டவர்கள் பக்கம் ஏழு அக்ஷௌகிணி படைகளும் கலந்துகொண்டதாகத் தகவல் உண்டு. குருஷேத்திர யுத்தம் நேரடியாக கீதையிலிருந்து துவங்குவதே வழக்கம். மாறாக வெண்முரசு அப்படை திரட்டல் (எழுதழல்), படைநகர்வு (செந்நாவேங்கை) என விரிவாக உரைக்கிறது. எவ்வளவு தகவல்கள்!!! படைகள் நகர் வழி ஏற்படுத்தும் ஏவலர் துவங்கி படைக்கு உதவும் பின்னணி வால்ப்பகுதி பணியாளர் வரை அத்தனை நுண்தகவல்கள். படைகளின் உணவுக்காக ஒவ்வொரு அக்ஷௌகிணிக்கும் ஒரு அடுமனை எனப் பிரித்தது துவங்கி பாடிவீடு அமைய வித விதமான கூரையமைப்பு மற்றும் கட்டும் பொருட்கள் என (மரப்பலைகைகள், மூங்கில் தட்டிகள், ஈச்சம்பாய்கள், யானைத் தோல், நாணல் பாய்கள், கயிற்ருச்சுருள்கள், தோல்பட்டைகள், கூடாரத்துணிகள்) படைப் பெருக்கிற்கு நிகரான தகவல் பெருக்கு. படை அந்தி சாய சற்று பொழுதிருக்கையிலேயே அமையத்துவங்குவதன் அதிபலன் (குறைவான பந்தங்களே போதும். எண்ணெயும் கொழுப்பும் மிஞ்சும்); படையின் பின்னணிப் பகுதி தான் முதலில் அமையத்துவங்குகிறது, அந்த அமையும் அசைவு மெதுவாகப் பரவி முன்னணிக்கும் சென்று சேர்ந்து அதன் பின் அவர்களும் அமைகிறார்கள் என கூடவே வரும் நுட்பங்கள். மீண்டும் மீண்டும் படை என்பது ஓருடல் கொண்ட மானுடத்திரள் என கூறப்படுகிறது. அது வெறும் கூற்று அல்ல என்பது அப்படை நடந்து கொள்ளும் விதத்தில் அறிய முடிகிறது.
கூடவே பாண்டவப் படைகளுக்கும், கௌரவப் படைகளுக்குமான வேறுபாடு ஒன்றும் வந்தறைகிறது. கௌரவப் படைகள் சென்ற வழிகள் மதயானை கடந்த காடென இருக்கையில், பாண்டவப் படைகள் செல்லும் வழிகள் தாய் யானை வழிநடத்தும் யானைக் கூட்டத்தினுடையதாக இருக்கிறது. அது ஒருவகையில் இயல்பானது தான். கௌரவப் படைகள் ஷத்ரியப் படைகள். போருக்கென உடல் திரட்டி, உளம் திரட்டியவர்கள் நிரம்பிய ஒன்று. போர் புரிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட மானுடர்களின் திரள். அத்திரளுக்கு அதன் தலைவன் இட்டதே கட்டளை. அதற்கு தார்மீகமான ஒரு நோக்கும், காரணமும் இருப்பதில்லை. மரணம் என்பதைத் தேடியே செல்பவர்கள். மரணம் உறுதி என்றால் எத்தவறும் சரியே என்றாகும் ஒரு உளநிலைக்கு அப்படைகள் ஆட்படுவது இயல்பே. இன்றும் ராணுவங்கள் அப்படித்தானே இருக்கின்றன. இறுதியில் அவர்களுக்கு தன்னவர்களுக்கும், எதிரிக்குமே வித்தியாசம் தெரியாமல் போவதும் நிகழத்தானே செய்கிறது. பானுமதிக்கு வரும் புகார்களிலும், கௌரவ ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலும் இந்த நிலையைக் கடப்பதற்கான ஒருக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதையும் செந்நாவேங்கை விரிவாகச் சொல்கிறது. இப்படைவீரர்கள் எப்போதும் இந்நிலையில் இருப்பதில்லை. போர் என்று வருகையிலேயே இத்தகைய அத்துமீறல்களை நிகழ்த்துகிறார்கள். அவர்கள் போருக்கு முன் சென்று வஞ்சினம் உரைத்து வரும், கொற்றவையும் பல்லாண்டுகள் மறைந்திருந்து வெளிப்படும் போது மட்டுமே குருதிப் பலி கேட்கும் பரோக்ஷையாகத் தான் இருக்கிறது.
மாறாக பாண்டவர்ப் படையில் இணைந்தோரில் ஷத்ரியகளை விட தொல்குடிகளே அதிகம். அவர்கள் இது நாள் வரை போரிட்டதன் ஒரே நோக்கம் தன் நிலம், தன் பெண், தன் குலம், தன் ஆநிரைகள் இவற்றைக் காப்பதற்காகவும், கவர்ந்தவரை வேரும், வேரடி மண்ணோடும் அழிப்பதற்காகவும் தான். ஆம், அவர்களின் ஒவ்வொரு வீரனுக்கும் ஒரு தார்மீகக் காரணம் இருந்தாக வேண்டியிருக்கிறது. அவர்கள் நிலத்தில் குருதி உலர்வதில்லை. அத்தகைய ஒரு தார்மீகக் காரணத்தைத் தான் எப்போதும் உலராக் குருதி கொண்ட பலிபீடம் உடைய ரக்தஃபோஜி ஆலயத்தில் கொற்றவைப் பூசனையின் போது திரௌபதி அவர்களுக்கு அளிக்கிறாள். பெண் நிறை காக்க எழுகிறார்கள் அவர்கள். எனவே தான் அவர்களிடம் பழகிய வீரர்களின் எதுவும் தவறில்லை என்ற எண்ணம் எழவில்லை. எந்நிலையிலும் அவர்கள் தன் குலத்தோர், எதிரி அல்லாதோரை தாக்குவதில்லை. எனவே தான் அப்படைகள் பொன் கொடுத்து உணவையும், கால்நடைகள், ஆடுகளையும் வாங்குகிறார்கள், கவர்வதில்லை. வழியில் இருக்கும் ஊருக்கு முன்னதாகவே சென்று படை வருவதை அறிவித்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பயிற்றுவிக்கிறார்கள், வெறுமனே உடைத்து அழித்து முன்னேறுவதில்லை.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்