அன்புள்ள ஜெ ,
பாண்டு தன் திருமணத்திற்காக செல்லும் பகுதியில் கங்கையில் குகர்களின் பாடல் வழியாக தன் அம்மாவின் மனதை அறியும் நிகழ்விடம் மிக பிடித்தது , நாவலின் மிக சிறந்த பகுதியில் ஒன்று இது , முதல் முறை படித்த போது என்னால் அந்த பாடலின் உணர்விற்குள் செல்ல முடியவில்லை , அடுத்தடுத்த வாசிப்பில்தான் உள்புக முடிந்தது , கண்கலங்கி விட்டேன் , என் அம்மாவின் ஞாபகமும் சேர்ந்து வந்தது .
நதி சீதையை , அவள் மனதை உணர்கிறது , சீதையிடம் பேசுகிறது , இன்னொரு தளத்தில் கங்கையும்(நதி) சீதையும் ஒன்று என வருகிறது , இன்னொரு தளத்தில் நதி படகுகளை பாவைகளாக்கி விளையாடி கொள்வதை அம்பாலிகாவின் பாவைகளுடன் விளையாடி கொள்ளும் மன இயல்புடன் பொருந்துகிறது .
பாண்டு பாதாள கங்கையை கண்டதாக சொல்கிறான் , அதனோடு பெண்களின் ஆழத்தில் உள்ள துயர் இணைந்து கொள்கிறது , ஜெ எனக்கு பிருதை வர துவங்கும் காட்சி முதல் பாண்டுவுடனான முதல் இரவு காட்சிக்கு முன்பு தன் வளர்ப்பு அம்மாவுடன் பேசும் காட்சி வரை பிருதை மேல் பிரியம் வர வில்லை , ஆனால் மரீஷையை முதல் காட்சியிலிருந்தே மிக பிடித்தது , மிக வலுவானவள் , ஆனால் தன் மனதை வெளிப்படுத்தாமல் பிறர்க்கு பணி செய்பவளாகவே தன் வாழ்வை அமைத்து கொள்கிறாள் , காட்டானை கோவில் யானையாக ஆவதை போல .
என்னுள் இருக்கும் ஆண் இயல்புதான் பிருதையை விரும்பாமல் ஆக்குகிறதோ என தோன்றுகிறது :)
பைரவி அன்னை சிறு நாய்க்குட்டியாக கர்ணனின் வளர்ப்பு அன்னையின் மார்பில் தவழும் இடங்கள் எல்லாம் மகத்தானவை .
கர்ணனை பிருதை எப்படி தவற விடுவாள் என்பதை அறியும் ஆவல் இருந்தது , பாரம்பரிய கதையில் பயந்து அவளாகவே நதியில் விடுவாள் , ஆனால் இதில் இவள் இயல்பு பயமறியாதது , ஆதலால் எப்படி நடக்கும் என எதிர்பார்த்தேன் , அவளாக விட வில்லை ,இதில் சூழலால் தவற விடும் படி ஆகிறது
ராதா கிருஷ்ணன்