ஜெ,
சாதாரண விவரணைகளுக்குள் இருந்து ஒரு கவிதை உருவாகி வருவதைத்தான் வெண்முரசின்
அழகுகளில் முக்கியமானதாக நான் நினைக்கிறேன். மந்திராலோசனை அறையில் மருந்துமணம் நிறைந்திருக்கிறது.
அன்றைய ஆண்டிபயாட்டிக்குகள் இரண்டுதான். கந்தகமும் படிகாரமும். இன்றும் கணிசமான ஆண்டிபயாட்டிக்குகள்
இவ்விரண்டின் கலைவையாகவே செய்யப்படுகின்றன. கந்தகம் தீ. படிகாரம் நீர். அவற்றின் சுவை,
வடிவம் ஆகியவற்றைக்கொண்டு செய்யப்படும் அந்த உவமை அழகானது. எரியாத தீ கந்தகம். அல்லது
எரியச்சாத்தியமான தீ. அதேபோல ஒளியாக உறைந்துவிட்ட நீர்தான் படிகாரம். இரண்டு உப்புகளும்
இரண்டு மூலகங்களின் வடிவங்கள். ஆகவே இரண்டு தெய்வங்கள் அவை. வெண்முரசின் கற்பனைவழியை
வைத்துப்பார்த்தால் இரண்டு பெண்தெய்வங்களாக அவை தோன்றினாலும் ஆச்சரியமில்லை
ஆர்.எஸ்.வாசன்