Thursday, October 25, 2018

பொருளில்லாச் சொல்



/ஒரு சொல்லை முற்றிலும் பொருளில்லாது பயன்படுத்தினால் அது பிற சொற்கள் அனைத்திற்கும் நஞ்சூட்டி சொல்வன அனைத்தையும் பொருளிலாதாக்குகிறது. பொருளில்லாச் சொல்லை சொல்வதென்பது பெரும் பொறுப்பு. எடைபோல அது நம் முதுகில் அமர்ந்திருக்கிறது” .

ஆனால் பொருளிலாச் சொல்போல் விடுதலை பிறிதொன்றில்லை. பித்தர்களும் கவிஞர்களும் அவ்விடுதலையில் திளைப்பார்கள். அரசர்களோ ஆயிரம் கடிவாளமிட்ட சொற்களை ஆள்பவர்கள்.// ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43

இன்று தொலைக்காட்சிகளில் நிகழும் விவாதங்கள், மேடைகளில் பேசப்படும் அரசியல் பேச்சுகள் [பாயியோ அவுர் பெஹ்ஹனோ] என அனைத்துமே பொருளிழந்த வெற்று சொற்களே. அதே நேரம் கவிஞர்கள் வெற்று சொற்களை நெய்து உருவாக்கும் கவிதைகளும் அதன் மறுமுனையில்தான் இருக்கின்றன என்பதை இதை வாசித்த உடன் ஒரு திடுக்கிடலோடு உணர்ந்தேன். எப்படி ஒன்று பொருளற்றதன் அபத்தமாகவும், ஒன்று பொருளற்றதன் கொண்டாட்டமாகவும் ஆகிறது? அதன் வழி எப்படி ஒன்று நஞ்சாகவும் ஒன்று அமிர்தமாகவும் உருவாகின்றது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. இந்த மாற்றம் வார்த்தைகளின் அர்த்தத்தில் இல்லை. தங்கள் பொருளற்ற தன்மையினால் இவை உருவாக்குபவை என்ன என்பதும், எதன் பொருட்டு இது செய்யப்படுகிறது என்பதுமே இவற்றை கவிதையாகவும் சொற்குப்பைகளாகவும் ஆக்குகின்றன என்பதை உணர்ந்தேன். what is at stake என்பதே அதை செய்வது. 

ஏ வி மணிகண்டன்