அன்புள்ள ஜெ.,
இது சற்றே உங்களை நுகர்வு நோக்கி நகர்த்துகிற ஒரு கேள்வி. அப்படியே வாசகர்களை உங்களை நோக்கி நகர்த்துகிற கேள்வியும் கூட. நான் தொடங்கியது கல்கியின் குழந்தைகள் புத்தகமான கோகுலத்தில்.அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ், துப்பறியும் சாம்பு ,தமிழ்வாணன், பி டி சாமி, நா பா, மணிக்கொடி எழுத்தாளர்கள் அசோகமித்திரன், சுஜாதா, ஜெயகாந்தன், கி.ரா, சு.ரா, ரஷ்யப் பெரு நாவல்கள் என்று எல்லாம் "எழுத்தெண்ணிப்" படித்திருக்கிறேன். இதற்குச் சமமாக ஆங்கிலத்திலும் ஒரு வரிசை. 2010லிருந்து உங்கள் வலைப்பக்கம். உங்கள் கண்ணீரைப் பின்தொடர்ந்ததில் இந்திய எழுத்தாளர்களின் மாபெரும் தரிசனம். உங்களுடைய படைப்புகளைப் பயின்றேன் என்று சொல்லும் அளவுக்கே படித்திருக்கிறேன்.
வெண்முரசு முதலில் 'முதற்கணம்' முதல் அத்தியாயம் உங்கள் வலைப்பதிவு வந்தபோதே படித்தேன். மிரண்டு போனேன். புதுமையான மொழி, நடை, அதீதமான செறிவு என்று புதிய பரிமாணத்தைக் காட்டியது. உள்வாங்க மிகச் சிரமமாகவே இருந்தது. தொடரவேண்டுமா என்றொரு தயக்கத்தோடே தொடர்ந்து நீங்கள் வலைப்பதிவு இட இடப் படித்து வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மொழி பழக ஆரம்பித்தது. அப்போது 4ஜி மொபைல் இப்போதுள்ளது போல அவ்வளவு பரவலாகவில்லை. வீட்டிலும் அலுவலகத்திலுமாக கம்ப்யூட்டரில் படிப்பேன். இந்த அவல வாழ்க்கையில் தொடர்ந்து படிக்க முடியாத வகையில் எத்தனையோ இடைஞ்சல்கள். முதல் நாவலைப் படித்து முடித்ததுமே முடிவு செய்து விட்டேன் இது நமக்கானதல்லவென்று. அதிலிருந்து வெண்முரசு தவிர உங்கள் தளத்தில் மற்றதெல்லாம் படிப்பேன். ஆனாலும் வாசகர் கடிதங்களும் வெண்முரசு விவாதங்களும் எப்படியோ என்னை இழுத்துக்கொண்டு வந்து 'நீல' த்தில் தள்ளியது. மிரண்டுதான் போனேன். வேறு விதமாக. எதையெல்லாம் கண்டு விலகினேனோ அதெல்லாமே என்னை உள்ளே இழுத்துக் கொண்டது. இத்தனைக்கும் மொழி கூடக் கடினப் பட்டிருந்தது நன்றாகவே தெரிந்தது. சீனிக்குளே மாட்டிக்கொண்ட எறும்பாக படித்து முடித்தேன்.இருந்தாலும் நாவல்களின் அளவு என்னை மலைக்கவே வைத்தது. நங்கநல்லூர் 'ரெங்கா லெண்டிங் லைப்ரரி' யில் தலைக்கு மேலே உயரத்தில் அடுக்கியிருந்த வெண்முரசு நாவல் வரிசையை உரிமையாளரிடம் சொல்லி கீழே மாற்றியதில் எனக்கு பங்குண்டு.
சரி, இத்தோடு நிறுத்திக் கொள்வோம் என்று முடிவு செய்தேன். ஒரு ரெண்டு வருடங்களுக்கு வெண்முரசைத் தொடவில்லை. ஒரு நாள் திடீரென்று நினைத்துக் கொண்டாற்போல 'வெய்யோனை' ஆரம்பித்தேன். ஐம்பது அத்தியாயங்கள் படித்து முடிக்கும்போது அந்த நாவலை மிக நீளமானதாக உணர்ந்தேன். சரி அடுத்த நாவலில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அடுத்த ரெண்டு வருடங்கள் சென்றன. சரி, ஆரம்பித்த வெய்யோனையாவது முடிப்போம் என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். எதனால் அந்த நாவலிலிருந்து விலகினேனோ அதை உறுதி செய்வன போலிருந்தன மீதமிருந்த அத்தியாயங்கள். குறிப்பாக இந்திரப் பிரஸ்தத்தில் வரும் அந்த நாடகக் கொட்டகைக் காட்சியும், தொடர்ந்த கர்ணனின் நாகர் உலக வருகையும். ஒரு வழியாகப் படித்து முடித்தேன். தொடர்ந்து சில வருட விலக்கத்திற்குப் பின் சும்மாத்தான் படித்துப் பார்ப்போமே? என்று 'செந்நாவேங்கை' முதல் அத்தியாயம் படித்தேன். வேங்கையின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை. பத்தே நாட்களில் எல்லா அத்தியாயங்களையும் படித்து முடித்தேன்.
பெருநாவல்கள் தொடர்ந்து எழுதும் "மெகலோ நாவலோ மேனியா" நோய்க்கூறு உள்ள ஒரே அதிமானுட எழுத்தாளன் கலியுகத்தில் பிறப்பான் கீழை நாட்டினில் உதிப்பான் என்ற பாட்ரிக் மெக்கின்ஸி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த நிமித்தகச் சூதன் பல நூறு வருடங்களுக்கு முன் பாடியதை நான் முதலில் நம்பவில்லை.
பகடி தவிர, இத்தகைய நாவல் வரிசை எந்த மொழியிலும் இதற்கு முன்னும் இல்லை பின்னும் இருக்கப்போவதில்லை. வாசகனாக உங்களுக்கு இந்த அனுபவம் கிட்டியிருக்க வாய்ப்பில்லை. இப்போதும் அலுவலகம் போகும்போது தினம் வருகிற 'திசை தேர் வெள்ளம்' மற்றும் அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் பொழுது 'சொல்வளர் காடு' - இன்று கடைசி அத்தியாயம் படித்து முடித்தேன். இன்னொரு முறை படிக்க வேண்டும் (நான் படித்து முடித்த உடனேயே மறுபடியும் படித்த ஒரே நாவல் உங்கள் 'ஏழாம் உலகம்') . திரு ராஜகோபால் அவர்களுடனான வெண்முரசு விவாத அமர்வு சொல்வளர் காட்டைக் கடக்க நல்ல உதவியாக இருந்தது - இந்த விலக்க விருப்பு விளையாட்டோடு மற்ற நூல்களையும் படித்து முடித்து விடுவேன் என்றே நினைக்கிறேன்.
மொத்தத்தில் வெண்முரசின் ஒவ்வொரு நாவலுமே ஒவ்வொரு சிகரம். பல சிகரங்கள் கொண்ட மாபெரும் மலைத்தொடர். ஒரு அதிமானுடப்படைப்பு. வாசகனிடமிருந்தும் அது அதிமானுட உழைப்பையே கோருகிறது. வெண்முரசு அறிமுக விழாவில் சென்னை 'மியூஸியம் தியேட்டரில்' நீங்கள் குறிப்பிட்டதைப் போல அது ஒரு நாவல் வெளி. ஏற்கனவே உலவிக்கொண்டிருப்பவர்கள், சிகரம் தொட்டவர்கள் பற்றிப் பிரச்சனையில்லை. வரப்போகிற புதிய வாசகர் தலைமுறை நுழைவதற்கு அதன் மாபெரும் விரிவு ஒரு தடையாய் இராதிருக்க, உலக வழக்கத்தையொட்டி 'வெண்முரசை' ஏன் ஒரே நூலாக வெளியிடக்கூடாது. ஒவ்வொரு நாவலும் நூறு பக்கங்களுக்கு மிகாத ஒரு அத்தியாயம் (நீலம் இந்த வரிசையில் வர வேண்டியதில்லை என்பது என் எண்ணம்). இருபது நீண்ட அத்தியாயங்கள். ஆயிரம் பக்கம் கொண்ட இரண்டு பாகங்கள். இதன் பலன் பல வகையானது. ஒன்று சிகரங்களில் ஏறி இறங்கி வெற்றி கொண்டவர்கள் அமர்ந்து இளைப்பாற, தொகுத்துக்கொள்ள ஒரு base camp ஆக இருக்கும். புத்தம்புது வாசகர்கள் நுழைவதற்கு ஒரு சிறந்த நுழைவாயிலாகவும் இருக்கும். அவரவர்க்கான சிகரங்களைக் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். மிகச் சிறந்த வாசக 'எடிட்டரா'ல் இது சாத்தியம் என்றே கருதுகிறேன். பின்னாளில் இந்த ஒற்றைப் பெருநூலே ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்படலாம். தலைமுறைகள் கொண்டாடும்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன்
பார்ப்போம் முதலில் எழுதிமுடிக்கவேண்டும். அதன் பல பகுதிகள் தனியாகவும் வரலாம்
ஜெ