அன்புள்ள ஜெ
கார்கடலின் தொடக்கத்தை
வாசித்துக்கொண்டிருக்கிறேன். திடீரென்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. நம் இந்துமரபின் கதைகள்
எவ்வளவு பிரம்மாண்டமானவை. ஆனால் நம்முடைய genesis கதை நாகர்களுடையது. இது மைய மரபுக்கு
அது adopt செய்யப்பட்டிருக்கிறது. தட்சப்பிரஜாபதியை ஒரு நாகம் என்றுதான் கொள்ளவேண்டும்.
சிலைகளில் ஆடுமுகம் கொண்டிருக்கிறார். நாகங்களுக்கான பல வர்ணனைகளில் அஜமுகம் என்று
வருகிறது. அவருடைய மகள்கள்தான் கத்ரு வினதை. இருவருமே முட்டைகள்தான் இடுகிறார்கள்.
ஆகவே அவர்கள் நாகங்கள்தான்.
மகாபாரதத்தில்
இது தெளிவாகவே இருக்கிறது. ஆனால் மொழியாக்கங்களில் கொஞ்சம் மாற்றிவிடுகிறார்கள். வியாக்கியானங்களில்
இன்னும் மாற்றிவிடுகிறார்கள். கத்ரு வினதை இருவருமே நாகங்கள் என்பதை உபன்யாசகர்கள்
சொல்வதே இல்லை. வெண்முரசை நான் வாசிக்கும் ஆரம்பநாட்களில் என் நண்பர் ஒருவர் இவர் நாகர்கதையாக
மாற்றுகிறார் என்று கடுமையாகக் கோபம் கொண்டார். அந்தக்கோபத்தை இப்போது புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆயிரம் ஆண்டுகளாகச் செய்துவந்த ஒரு திரிபுவேலை. அதை இன்னொருவர் கடந்துபோவதை இவர்களால்
தாங்கமுடியவில்லை.
மகாபாரதம் என்பது
இந்த நிலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களின் கதைகளும் அடங்கியது. இந்நிலம்போலவே விரிந்தது.
ஆகவெதான் அது மகாபாரதம். அது எந்த மதப்பிரிவுக்கும் உரிய நூல் அல்ல. எந்த இனமும் குலமும்
அதை உரிமைகொண்டாட முடியாது. மகாபாரதத்திற்கு உருவாக்கப்பட்ட ஒற்றை அர்த்தங்களிலிருந்து
அதை மீட்கிறது வெண்முரசு. அதுவே இந்நாவல்தொடர் உருவாக்கும் மகத்தான கலாச்சார பணியாகும்
எம்.ஆர்.தக்ஷிணாமூர்த்தி