அன்புள்ள ஜெயமோகன் சார்.
பாரத வர்ஷத்தின் அனைத்து மெய்யியல்களும் இயற்கையை கூர்ந்து நோக்கி கண்களாலும் வேறு புலன்களாலும் மட்டும் அல்லாமல் முழுமையான விழிப்புள்ள ஒற்றை மனதினால் தோன்றியது என கார்கடலின் இருபதாம் அத்தியாயம் கூறுகிறது. இடியும் மின்னலுமாக மனிதமனத்தின் விசைகளோடு மோதும் இயற்கையின் விசையாக.அதில் இருந்து ஆதி தத்துவம் உருவாகிறது.பிறகு அது அடுத்து தனது விசையின் தாக்கத்தை சோதிக்க எண்ணி பறவைகள், விலங்குகள், நாகங்கள் போன்ற உயிரினங்களின் தத்துவ விசையோடு மோதுகிறது. பிறகு உலோகங்கள், கூர்தீட்டப்பட்ட ஆயதங்கள் அவற்றின் உள்ளே ஒளிந்திருக்கும் தீ, ஆகியவற்றோடு மோதுகிறது. பிறகு தங்களின் வஞ்சங்களோடு சூதன் மகனே, பேடியே எனக்கூறி மனித மனங்களுக்குள் உள்ள விசைகளோடு. இவைதான் பிறகு வேதங்களாக மலர்கிறது. இவை எவையும் ஒன்றை ஓன்று அழிக்கவில்லை. தொகுத்துகொள்கிறது. எஞ்சுவது மனிதனின் கசப்பும் வஞ்சமும் தான். அதுவும் கரைந்தபின் பரிபூர்ண பரிசுத்தம்.
இப்படி தான் நான் புரிந்துகொண்டேன்.
ரிக்:இந்திரன்- அக்கினி இவர்களோடு அனைத்து திசைகளும், காலங்களும், நதிகளும்கலைகளும் கல்விகளும் வணக்கபடுகின்றன. எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்று இருக்கிறது.
சாமம் : கிரியைகளின் அல்லது இயற்கை, உரினங்கள், மனிதன் ஆகியவர்கள் செய்யும் செயல்களின் படி அவர்களின் அறிவை முன்வைக்கிறது.
யசூர் : அறிவின் வேதம். இரண்டாக பகுக்கபட்டு " கிருஷ்ணம், சுக்கிலம்" என அழைக்கபடுகிறது. அதாவது சாமத்தில் இருந்து அறிவு தொடங்கும் போது அவை இரு விசைகள் ஆகின்றன.
அதர்வம் : அறிவின் வெறுப்பினால் தங்களை,பிறரை அழித்துக்கொள்ள இருவிசைகளும் மீண்டும் இயற்கையை அல்லது தங்களின் திரிபுபட்ட மனைதை நம்பி செயல்படல்.
பிறகு அனைத்தையும் சம்படுத்தும் புராணங்கள். ஏனென்றால் சமநிலையில்லாமல் இந்த பூமியில் எப்படி வாழ்வது?
ஆனால் கடைசியில் வெண்முரசு ஏகாக்ஷன் கூறுவதாக"என் சொற்கள் சூதர் செவிகளில் விழுந்து சித்தங்களில் முளைத்து சொற்களெனப் பெருகி நூறாயிரம் தலைமுறைகள் கடந்த பின்னர் ஒருவேளை இதன் ஒரு முகத்தை மானுடர் சென்றடையக்கூடும்" என்று சொல்கிறது. இதையெல்லாம் படிக்க படிக்க மனம் கொந்தளிக்கிறது.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்